நேபாளத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர். மொத்தமாக மீட்கப்பட்ட 19 பேரில் 3 பேர் டெல்லிக்கு சென்றனர்.
கைலாஷ் மான்சரோவர் புனித யாத்திரைக்காக, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் 23 பேர் கடந்த ஜுன் 20ந் தேதி நேபாளம் சென்றிருந்தனர்.
இதேபோன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தினால் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். விமானப் போக்குவரத்து முடங்கியதால் 23 பேரும் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அதன்பின்னர் இவர்களை மீட்க தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை மூலமாக நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் 4 பேர் ஹெலிகாப்டர் மூலமாக ஏற்கனவே சென்னை திரும்பிய நிலையில், மீதமிருந்த 19 பேரும் சிறிய ரக விமானம் மூலம் நேற்றுமுன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் டெல்லி சென்றுவிட்டதால், 16 பேர் லக்னோவில் இருந்து விமானம் முலம் சென்னை வந்து சேர்ந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் கட்டித் தழுவி வரவேற்றனர். நேபாளத்தில் ஐந்து நாட்கள் கடுமையான குளிரில் தவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.