தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 3 வழித் தடங்களில் மித அதிவேக ரயில் மண்டலப் போக்குவரத்து (ஆர்.ஆர்.டி.எஸ்.) அமைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வேகமாக வளர்ந்து வரும் தமிழக பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே சேவையை சென்னை-செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் வரை 167 கிலோ மீட்டருக்கும், சென்னை-காஞ்சீபுரம்-வேலூர் வரை 140 கிலோ மீட்டருக்கும், கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் வரை 185 கிலோ மீட்டருக்கும் வழித் தடங்கள் உருவாக்கிட தேவையான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 2 முதல் மே 2 பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக டெண்டர் கோரும் நிறுவனங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக 167 கி.மீ., சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் வழியாக 140 கி.மீ., கோவை - திருப்பூர் - சேலம் வழியாக 185 கி.மீ. தொலைவுக்கு மித அதிவேக ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் வகையிலான, ஆர்.ஆர்.டி.எஸ். போக்குவரத்து டெல்லி - மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.