ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 17 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனைக்காக இவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 400 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு பிரிவும், கொரோனா பரிசோதனை மையமும் இயங்கிவருகிறது. இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு அதிகளவிலான மக்கள் வந்து செல்வதால், சமூக விலகல் நெறிமுறையை கடைபிடிப்பதற்கான கட்டமைப்புகள் போதியளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்துவந்தது.
இந்நிலையில், மருத்துவர்கள் 17 பேருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படும் செய்தி தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதுகுறித்து மருத்துவ வாட்டாரங்கள் தெரிவிக்கையில்," தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டது உண்மை தான். ஆனால், இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட அனைவரும், மருத்துவக் கல்லூரியில் பாடம் எடுக்கும் பேராசிரியர்களாக உள்ளனர். அதனால், நோயாளிகளுடன் நேரடி இவர்களுக்கு தொடர்பில்லை.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த நிர்வாக கூட்டத்தில் இவர்கள் அவ்வப்போது கலந்து கொண்டனர்" என்று தெரிவித்தன .
மிகவும் லேசான அறிகுறிகள் உள்ள அல்லது அறிகுறிகளுக்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில், வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதற்கான வசதி உள்ளவர்கள், அவ்வாறே இருப்பதற்கான வாய்ப்பைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவித்தது. எனவே, கொரோனா பிரிவில், மருத்துவர்களை பணி அமர்த்தாமல் ஆயுஷ் பணியாளர்கள்,சமூகச் சுகாதாரப் பணியாளர்கள், போன்றோரையும் பணி அமர்த்தலாம் என்று தமிழ்நாடு மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் ஜி.சந்திர சேகர் என்கிற மருத்துவர், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தமிழக அரசுக்கும், சுகாதாரத் துறைக்கும் கடிதம் எழுதிய காரணத்தால் தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே, அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதுமான பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்படவில்லை என்ற பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.