18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியிடம் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் மற்றும் இறுதி வாதம் விறுவிறுப்பாக அமைந்ததும். அது பற்றிய ஒரு பார்வை இங்கே:
டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 25) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More: 18 MLAs Case LIVE UPDATES: டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு நடைபெற்ற வாதம் பற்றிய விவரம் வருமாறு:
மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம்: ‘சபாநாயகர் உத்தரவு என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது. எனவே சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நீதிதுறையும் ஆய்வு செய்யலாம்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம் அதனை சபாநாயகர் வழங்கவில்லை.
சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணங்களின் அடிப்படையில் 18 உறுப்பினர்களை தகுதி நீக்க செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், ஆளுநர் சந்தித்து மனு அளித்த ஜக்கையனுக்கும், மற்ற 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் இருந்து அந்த உத்தரவு உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கும் போது அதிமுக கட்சியே கிடையாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. அவ்வாறு இருப்பின் எடப்பாடிக்கு எதிராக மனு அளித்ததற்காக எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? முதல்வர், சபாநாயகரிடம் அளித்த பதிலில், 18 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ, கட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ கூறவில்லை. மாறாக தனக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக மட்டுமே கூறியுள்ளார்.
கட்சியை பிளவுபடுத்திய பன்னீர்செல்வம் அணியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று அனுமானத்தின் அடிப்படையிலேயே எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதிலிருந்தே சபாநாயகர் பாரபட்சமாக செயல்பட்டார் என்பது தெரிகிறது.
ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது. ஆட்சிக்கு எதிராக கட்சிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுகிறோம் என்று கொறடாவோ, முதலமைச்சரோ எங்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு வைக்கவில்லை. சபாநாயகர் மட்டும் தான் அப்படி கூறி வருகிறார்.
திமுக-வுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறோம் என்று கூறுவதும் சபாநாயகர் தான். நாங்கள் ஆளுநரை சந்தித்த அதே நாளிலேயே அல்லது அதன் பிறகே திமுகவும் சந்தித்ததற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்கள் மீதான புகாரில் முதல்வரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்கள் தரப்பு வாதத்தையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
18 எம்.எல்.ஏ தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது: ‘அதிமுக கட்சி பிளவுபட்டு, இரு அணிகளாக இருந்த சமயத்தில், அக்கட்சி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டு இருந்தது. அச்சமயத்தில், அதிமுக சார்பில் கொறடா புகார் கொடுத்தது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு தான் உள்ளது. 18 எம்.எல்.ஏ. விவகாரத்தில் முடிவெடுக்கும் தனது அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர் சொல்கிறார். ஆனால், அதே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான புகாரின் மீதான விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, முடிவெடுக்க முடியாது என்று சபாநாயகர் கூறுகிறார். ஒரே மாதிரியான விசயத்தில், இரு மாறுபட்ட நிலையை சபாநாயகர் எடுத்துள்ளார். இதன் மூலம், சபாநாயகரின் உள்நோக்கம் தெரிகிறது.
அதிமுக பிளவுபட்ட போது, சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று இரு அணிகள்தான் இருந்தது. சசிகலா ஜெயிலுக்கு சென்றதும், 3 வதாக ஒரு அணி உருவானது. பின்னர், ஓ.பி.எஸ் - ஈ. பி.எஸ். இருவரும் சேர்ந்து விட்டனர். அவர்களிடம் தேர்தல் ஆணையம் கட்சியை ஒப்படைத்து விட்டது. இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கட்சி விவகாரம் தேர்தல் ஆணையத்தின் முன்பு நிலுவையில் இருக்கும் போது, சபாநாயகர் முடிவு எடுத்தது தவறு. சபாநாயகரின் இதுபோன்ற முடிவை ஆதரித்தால் அது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும். முதல்வர் எடப்பாடியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். இது முற்றிலும் இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார்.
சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தனது வாதத்தில் - ‘கட்சிக்கு வெளியில் இருந்து தாக்குதலை நடத்தும் போது அது கட்சியை விட்டு வெளியேறியதாக தான் எடுத்துக் கொள்ள முடியும். அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. அவரிடம் அரசியல் சாசன கடமைகளை ஆற்றுங்கள் என மனு அளிப்பது, ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமே என கருதப்படும்.
ஆளுநரிடம் அளித்த புகார் என்பது தனி நபருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் அல்ல. பெரும்பாண்மை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு எதிரான புகார் ஆகும். தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்தது என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான அவர்களின் ஆதரவை திரும்ப பெற்று கொண்டதாகவே கருத முடியும்.
சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும்.
முதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது.
தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் வகை செய்யும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை.
நீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர். நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது.
ஆளுநர் ஒரு அரசை கலைப்பது அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவது என்பதில் மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் எதற்காக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர் என்ற கேள்வி எழுகிறது.
ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையிலும் அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதாக ஏன் அறிவிக்கவில்லை.? நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறிய அவர்கள் தான் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளனர்.
கட்சி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையேயான பிரச்சனை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதை தலைமை நீதிபதி அமர்வின் இரு நீதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இரண்டு பிரிவாக இருந்தாலும் கட்சி தொடர்கிறது. அந்த கட்சி தான் ஆட்சியிலும் இருக்கிறது. சபாநாயகர் தன் முடிவை அறிவிப்பதற்கு முன் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால், ஜக்கையன் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை.
தகுதி நீக்க விதிகளின்படி, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான புகாரை சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கருத்துக்களை பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன.
தங்கள் குறைகள் குறித்து முதல்வரை சந்தித்து முறையிட்டதாகவும், அதை அவர் மறுத்ததால், அவரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என 18 எம்.எல்.ஏ.க்கள் கோருகின்றனர். ஆனால் முதல்வரை சந்தித்தது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறி விட்டதால், முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய கோர முடியாது.
உட்கட்சி வழிமுறைகள் தோல்வி அடைந்ததன் காரணமாக தான் ஆளுநரை சந்தித்தாக 18 எம் எல் ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 18 பேரின் கருத்துக்களை கட்சி ஏற்று கொள்ளவில்லை என்பதற்காக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
ஆளுநர் முதலமைச்சரை மாற்றும் அதிகாரம் படைத்தவர் அல்ல. அந்த சூழலில் 18 பேரும் ஆளுநரை சந்தித்தது சட்டவிரோதமானது.
2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளுநரை சந்திப்பதை சட்ட விரோதம் என தெரிவித்துள்ளது. எனவே இவர்களது நடவடிக்கையும் சட்டவிரோதமானது.
சபாநாயகரிடம் தங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் தான் அளித்திருக்க வேண்டுமே தவிர முதலமைச்சர், அரசு கொறடா ஆகியோரை குறுக்கு விசாரணை செய்து இதன் மூலம் நிரூபிக்க உரிமை கோர முடியாது. நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில் இவர்கள் ஆளுநரை சந்தித்தது தவறாக இருந்தாலும் அதற்காக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்ற நீதிபதி சுந்தரின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் எனவும் இவர்கள் சாதாரண மனிதரை விட சட்டமன்ற உறுப்பினர்கள் கூடுதல் சட்ட விவரங்கள் தெரிந்தவர்களாக இருப்பவர்கள்.எனவே இவர்கள் நோக்கம் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சரியான இடத்தை மனுதாரர்கள் ஆளுநரை அணுகியுள்ளனர்.
எனவே சபாநாயகரின் முடிவு சரியானது இயற்கை நீதிக்கு எதிரானது அல்ல. இவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்து மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து இவர்கள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சபாநாயகர் தரப்பு வாதத்தை நிறைவு செய்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தன்னுடைய வாதத்தில், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாக்கல் செய்துள்ள மனுவில் பல இடங்களில் முதல்வரை குறிப்பிடும்போதும், தங்களது கட்சியைச் சேர்ந்த முதல்வர் எனவும், தங்களது கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவர்கள் தனி இயக்கமாகவோ, தனி அணியாகவோ கருதமுடியாது’ என தெரிவித்தார்.
இதன்மூலம் அவர்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என்றும் வாதிட்டார். கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில் அதிமுக என்ற கட்சியே இல்லை என கூறிவிட முடியாது எனவும் தெரிவித்தார்.
தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகார வரம்பு இல்லாவிட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், ஆளுநரிடம் புகார் மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களின் நடத்தை, அரசியல் ஒழுக்ககேடு மட்டுமல்லாமல், முறையற்ற செயலும் கூட என தெரிவித்தார்.
முதல்வருக்கு சட்டபேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 எம்.எல்.ஏகள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால் தான், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார் என வாதிட்டார்.
முதல்வரை மாற்றக் கோரி 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால், முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. ஆளுநருக்கு அளித்த கடிதம், சபாநாயகர் முன் வைத்த வாதங்கள், இந்த மனுவின் கோரிக்கை என அனைத்திலும் எடியூரப்பா வழக்கையே மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளதாக கூறிய மூத்த வழக்கறிஞர், எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகளும் எடுத்துகொள்ளவில்லை என வாதிட்டார்.
அரசியல் விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது எனவும், 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு கடிதம் அளித்த பின்னர் ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
18 எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் முழுமையாக நியாயப்படுத்தியுள்ளார் எனவும் வாதிட்டார்.
அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி தன்னுடைய வாதத்தை எடுத்துவைத்தார். அவர் தன்னுடைய வாதத்தில், ‘இந்த வழக்கில் எம்.எல்.ஏ ஜக்கையனை ஒரு மாதிரியாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரை வேறு மாதிரியாகவும் நடத்தியதாக மனுதாரர்கள் கூறுவது தவறான குற்றச்சாட்டுகள் ஆகும்.
சபாநாயகர் விளக்க அளிக்க உத்தரவிட்ட போது ஜக்கையன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், முதல்வரை மாற்ற வேண்டும் என்று வைத்திருந்த நிலைப்பாட்டையும் மாற்றியதால் தான் அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
ஆனால் மற்றவர்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பதை அறிந்து தான் அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரைத்தேன்.
18 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, என்னை ( அரசு கொறடா) குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தேர்தல் ஆணையத்தில் தடை இருந்ததே தவிர 18 பேரும் அதிமுகவில் நீடித்தனர். கட்சியில் இருந்து கொண்டே முதல்வருக்கும் அரசுக்கும் எதிராக செயல்படுவதால் கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன்.
வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் அனைத்து வித ஆதாரங்களை உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். எனவே சபாநாயகர் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என தனது வாதத்தை நிறைவு செய்தார்.
சபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, அவர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும், கொறடா தரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளித்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் இறுதி பதில் வாதத்தை வாதிட்டார்.
அப்போது அவர், ‘கட்சி யாருக்கு சொந்தமானது என்ற பிரச்னை காரணமாக தேர்தல் ஆணையம், கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்?’ என கேள்வி எழுப்பி வாதிட்டார்.
சபாநாயகரை விட அதிக அதிகாரத்தை உடைய தலைமை தேர்தல் ஆணையர் அதிமுகவை முடக்கி பிறப்பித்த உத்தரவு நிலுவையில் உள்ள போது தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
மேலும் கட்சி பிரச்சனை தொடர்பான புகார் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி, ஒபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த சபாநாயகர், 18 எம்.எல்.ஏ கள் மீது பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளார் என வாதிட்டார்.
மேலும், கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை, தாமாக முன் வந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்களாக கருத முடியாது. கட்சி தான் பிரதானமே தவிர கட்சித் தலைமை அல்ல எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.
இதனையடுத்து 18 எம்.எல்.ஏ தரப்பில் மற்றுமொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தன்னுடைய இறுதி பதில் வாதத்தை எடுத்து வைத்தார். அவர் தன்னுடைய வாதத்தில், முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தார்கள் என்பதற்காக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்ற யூகத்தின் அடிப்படையில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
அரசியல் கட்சி என்பதற்கும், சட்டப்பேரவை கட்சி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், ஆனால் கட்சி கொறடா உத்தரவை மீறி பேரவையில் வாக்களித்தால் மட்டுமே அது தகுதி நீக்கத்துக்கு வழி வகுக்கும்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபாநாயகரின் முடிவு நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். சபாநாயகரின் உத்தரவுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு சட்டப்பேரவை சம்பந்தப்பட்டது அல்ல, அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றார்.
மேலும் அரசியல் சாசனம் பத்தாவது அட்டவணைப்படி ஒரு தீர்ப்பாயமாக செயல்பட்டு இருக்கிறாரே, தவிர சபாநாயகராக செயல்படவில்லை என்பதால், தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் எனவே சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியும் என வாதிட்டார்.
ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஜக்கையன் அளித்ததாகச் சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்கள் சபாநாயகர் தங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் செயல்படவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஆளுநருக்கு அளித்த 4 பக்க கடிதத்தில் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராக அல்லது ஆட்சிக்கு எதிராக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் முதல்வரை மட்டும் மாற்ற வேண்டுமென தெரிவிக்கபட்டது என 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் தெளிவுபடுத்தினார்.
உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது எனவும் அவர் வாதிட்டார்.
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிக்கு எதிராக இவர்கள் 18 பேரும் செயல்பட்டார்கள் என்ற சபாநாயகரின் முடிவு தவறானது எனவும், சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு அளித்த பதிலை முழுமையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாகவும், இந்த உத்தரவு என்பது முற்றிலும் தவறானது எனவும் வாதிடப்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் மற்றும் சட்டபேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தன்னுடைய பதில் இறுதி பதில் வாதத்தில் உள்கட்சி பிரச்னைகளை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்ல முடியாது. ஒருவேளை ஆளுனர் இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் என்ன முடிவுகள் வந்திருக்கும். ஆளுங்கட்சிக்கு எதிராக முடிவுகள் அமைந்திருக்கும். இதிலிருந்து 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது எனக் கூறினார்.
மேலும், முதல்வரை ஆளுநரால் மாற்ற முடியாது. கட்சி நடவடிக்கை எடுக்காததால் ஆளுனரிடம் புகார் அளித்ததாக எம்.எல் ஏ.க்களே ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என வாதிட்டார்.
18 பேர் புகார் அளித்த அடுத்த நாள், திமுக செயல் தலைவர் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த கட்சிக் கூட்டத்திற்கு 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என வாதிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.