18 MLAs' disqualification Case Verdict: டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரிதான் என நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவு பிறப்பித்தார். குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து 18 பேரும் துணைப் பொதுச்செயலாளரின் அறிவுரை பெற்று ஒருமித்து செயல்படுவோம்.
தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாது என யார் சொன்னது? சென்னையில் முன்னாள் மேயர் அப்படி சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கறிஞரா? முன்னாள் நீதிபதியா? நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும். போட்டியிட்டால் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். ஆனாலும் எங்கள் உரிமையை நிலைநாட்ட மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து முடிவெடுப்போம்’ என்றார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் இன்று (25.10.2018 வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளிக்க பட்டியல் இடப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மாற்ற வேண்டும் எனவும் அவருக்கு எதிராகவும் தமிழக ஆளுநரிடம் டி.டி.வி. தினகரன் ஆதரவு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கடிதம் அளித்தனர்.
Read More: நல்ல தீர்ப்பு; இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி
Read More: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: நீதிமன்றத்தை அதிர வைத்த பரபரப்பு விவாதம், முழு விவரம்
இதனை தொடர்ந்து கட்சித் தாவல் சட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 11ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதனை பதிவு செய்திருப்பதாகவும் எனவே சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான எம். சுந்தர் சபாநாயகர் உத்தரவு என்பது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் ஒருதலைப்பட்சமானது எனவும் தெரிவித்திருந்தார். சட்டவிதிமுறைகள் மீறப்படும் பொழுது அதில் நீதிமன்றம் தலையிடலாம் என தெரிவித்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.
இரண்டு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை தெடர்ந்து வழக்கை மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில்தான் நீதிபதி சத்தியநாராயணன் இன்று (25-ம் தேதி) தீர்ப்பு வழங்கினார். இது தொடர்பான நிகழ்வுகள் உடனுக்குடன் இங்கே:
18 AIADMK MLAs' disqualification Case Verdict Today:
4:00 PM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேர்தலில் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாகவும் கூறினார்.
3:15 PM: குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து 18 பேரும் துணைப் பொதுச்செயலாளரின் அறிவுரை பெற்று ஒருமித்து செயல்படுவோம்.
தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாது என யார் சொன்னது? சென்னையில் முன்னாள் மேயர் அப்படி சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கறிஞரா? முன்னாள் நீதிபதியா? நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும். போட்டியிட்டால் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். ஆனாலும் எங்கள் உரிமையை நிலைநாட்ட மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து முடிவெடுப்போம்’ என்றார்.
3:00 PM: குற்றாலத்தில் முகாமிட்டிருக்கும் டிடிவி தினகரன் அணி தகுதி நீக்கம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மதுரை திரும்புகிறார்கள். மதுரையில் டிடிவி தினகரன் பங்கேற்கும் விழாவில் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
2:45 PM: இடைத்தேர்தலை சந்திக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், இடைத்தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தர்மம் வென்றது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
1:45 PM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணானது என்றும், இதில் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
1:00 PM: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது பேட்டியில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த அதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
12:45 PM: 18 தொகுதி தீர்ப்பு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
Read More: 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை...
Read More: 18 எம் எல் ஏக்கள் எவ்வழியோ.. நானும் அவ்வழியே.. தீர்ப்புக்கு பின்பு டிடிவி தினகரன் சூளுரை!
12:25 PM: தீர்ப்பு குறித்து அதிமுக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகம் வென்றது’ என கருத்து தெரிவிக்கப்பட்டது.
12:20 PM: நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க அமைச்சர்கள் பலரும் அவரது இல்லத்திற்கு வந்தனர். அங்கு அவருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் அமைச்சர்களுடன் தலைமைக்கழகம் வந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
12:00 PM: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருந்த நெருக்கடியை அகற்றியிருக்கிறது. எனவே இப்போதைக்கு அரசுக்கு ஆபத்து இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படாது என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.வுக்கும், பொதுத்தேர்தலை எதிர்நோக்கும் திமுக.வுக்கும் இது ஷாக்!
Chennai: AIADMK supporters celebrate after Madras High Court upholds disqualification of 18 rebel AIADMK MLAs. #TamilNadu pic.twitter.com/8bgyAlR3fM
— ANI (@ANI) October 25, 2018
11:40 AM: டிடிவி தினகரன் அணியில் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர், மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என ஏற்கனவே கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அப்படி மேல்முறையீடு செய்யாதபட்சத்தில் இந்த தகுதி நீக்க உத்தரவு அடிப்படையில் 18 பேரும் தேர்தலில் நிற்க முடியாது என ஆளும்கட்சி ஆட்சேபம் தெரிவித்து வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வைக்கும் வாய்ப்பு உண்டு.
எனவே மேல்முறையீடு செல்வதுதான் டிடிவி தினகரன் தரப்புக்கான வாய்ப்பு என வழக்கறிஞர்கள் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.
11:15 AM: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிபதி எம்.சத்தியநாராயணன் நீக்கினார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.
10:43 AM: தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், ‘மேல் முறையீடு செய்வதா? அல்லது, தேர்தலை சந்திப்பதா? என்பதை 18 எம்.எல்.ஏ.க்களும் கூடி முடிவு செய்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவை கட்சி ஏற்றுக்கொள்ளும்’ என குறிப்பிட்டார்.
It is not a setback for us. This is an experience, we will face the situation. Future course of action will be decided after meeting with the 18 MLAs: TTV Dinakaran on disqualification of 18 AIADMK MLAs upheld by Madras HC pic.twitter.com/yg1K9VDSLb
— ANI (@ANI) October 25, 2018
‘நீதிமன்ற தீர்ப்பை வைத்து துரோகி என எங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுவது சரியல்ல. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏற்கனவே ஆர்.கே.நகர் மக்கள் அவர்களை துரோகி என தீர்ப்பளித்தனர்’ என்றார்.
10:40 AM: துரோகிகளுக்கு நல்ல பாடம் கிடைத்திருக்கிறது என இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
10:37 AM: சபாநாயகர் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததால், எடப்பாடி பழனிசாமி அரசு தப்பியது. அரசுக்கு இப்போது ஆபத்து எதுவும் இல்லை.
10:33 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரிதான் என நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவு பிறப்பித்தார்.
10:20 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிமன்ற அறைக்கு வந்தார். சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
10:00 AM: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சுகாதாரத்துறை ஊழியர் நியமனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் வரவில்லை. முதல்வருக்கு பதிலாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் காமராஜ், கடலூர் எம்.பி. அருண்மொழித் தேவன், தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.
9:45 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என வழக்கறிஞர்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் கூறினார்.
9:15 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
8:30 AM: அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பில் இந்தத் தீர்ப்பு உள்ளதால் பல்வேறு கட்சிகளின் வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திரள்கிறார்கள். ஜூனியர் வழக்கறிஞர்கள் பலரும் இந்த வழக்கின் தீர்ப்பை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நீதிபதி எம்.சத்யநாராயணா அமர்வில் முதல் வழக்காக எடுத்துக்கொண்டு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7:45 AM: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரவிருப்பதை தெரிந்துகொண்டு டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பே குற்றாலத்தில் முகாமிட்டனர். இன்று தீர்ப்பை பொறுத்து தங்களில் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்ய இருக்கிறார்கள் அவர்கள்.
7:00 AM: இந்த வழக்கில் இன்று (25.10.2018 வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை உயர்நீதிமன்ற பதிவுத்துறை வழக்கு விசாரணையை பட்டியலில் வெளியிட்டுள்ளது.
6:30 AM: நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் அனைத்து தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்தனர். 12 நாட்கள் இறுதி வாதங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர், அரசு கொறடா, முதலமைச்சர், ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து வழங்கிய தீர்ப்பினை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் நீதிபதி சத்யநாராயணன் தள்ளி வைத்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.