18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14ம் தேதி இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகள் வழங்கியதால், வழக்கின் இறுதி தீர்ப்பு 3வது நீதிபதிக்கு மாற்றம்.
முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி கடந்த ஆண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.
அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில் மற்ற 18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூத்த நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மூத்த நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் பட்டம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.விமலா 1957 ஜனவரி 11 ஆம் தேதி பிறந்தார். 1983 கடலூர் மற்றும் சிதம்பரத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2002 ஆம் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக பணியாற்றினார். உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2011 ஆம் நியமிக்கப்பட்டு, அதன்பிறகு கடந்த 2013 ஆம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற நீதிபதியாக பெண்கள் முன்னேற்றம், கைதிகள் மறுவாழ்வு, விபத்து இழப்பீடு, விவாகரத்து போன்ற வழக்குகளில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை பிறப்பித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் வரும் 2019 ஜனவரி மாதம் 10 தேதி பணிஓய்வு பெறப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.