18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு!

அ.இ.அ.தி.மு.க. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில், சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. சசிகலா கட்சியின் தற்காலிக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரை சட்டமன்ற கட்சி தலைவராகவும் தேர்வு செய்தனர். அவர் முதல்வராக பதவி ஏற்க வைக்க முயற்சிகள் நடந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் போர் கொடி தூக்கினர்.

மகாராஷ்ராவில் இருந்த கவனர் வித்யா சாகர் சென்னை வருவது தள்ளிப் போனது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர்.

சில மாதங்களில் ஓ.பி.எஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைய முடிவெடுத்தனர். ஓபிஎஸ் அணியினர், சசிகலா குடும்பத்தினரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை எடப்பாடி அணியும் ஏற்றுக் கொண்டது.

இது டிடிவி.தினகரனை கடும் கோபம் கொள்ளச் செய்தது. இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து, முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என மனு கொடுத்தனர். இதையடுத்து செப்டம்பர் 18, 2017 அன்று 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தன்பால் அறிவித்தார்.

இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணை முடிந்து பல மாதங்களாக தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிக்கப்பட்டால், ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் 18 பேரும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள். டிடிவி.தினகரன் இப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மேலும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி.தினகரனுக்கு ஆதரவளித்து வருகின்றனர். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற தனியரசு, கருணாஸ், தமீம் அன்சாரி ஆகியோரும் எடப்பாடிக்கு எதிராக பல முறை கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களும் டிடிவி.தினகரனுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால் டிடிவி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.

நாளை தீர்ப்பு 18 எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக வந்தால், முதலில் சபாநாயகரை நீக்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் இருக்கிறது. அப்படி நடந்ததால், திமுகவுடன் டிடிவி.தினகரன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். ஆறு மாதத்தில் இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது வரும். அப்படியொரு சூழலில் ஆளும் கட்சி 18 தொகுதிகளிலும் ஜெயிப்பது கஷ்டம். திமுகவோ, டிடிவி.தினகரன் அணியினரோதான் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

தனிக் கட்சி ஆரம்பித்துள்ள டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்றாலும், தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க எந்த பிரச்னையும் இருக்காது.

×Close
×Close