18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி கடந்த ஆண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.
அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில் மற்ற 18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.

இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் இந்த வழக்கின் விசாரணை 3வது நீதிபதிக்கு சென்றது. 3-வது நீதிபதியாக நீதிபதி சத்திய நாராயணனை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும். அவர் இந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து 5 நாட்கள் தினமும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மனைவி, மகளுடன் நீதிபதி சுந்தர் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. மொட்டை கடிதமாக வந்தடைந்ததில் நீதிபதி சுந்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.

×Close
×Close