18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தங்க தமிழ்செல்வன் வாபஸ் பெறவில்லை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை தேதியை முடிவு செய்து அறிவித்தார் நீதிபதி சத்தியநாராயணன். தங்க தமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறவில்லை.

18 MLAs Disqualification Case, Justice Sathyanarayanan, Trial Begins July 23
18 MLAs Disqualification Case, Justice Sathyanarayanan, Trial Begins July 23

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை தேதியை முடிவு செய்து அறிவித்தார் நீதிபதி சத்தியநாராயணன். தங்க தமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறவில்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு பெற்றிருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என கோரி அவருக்கு எதிராக, ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சானது கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர்.

தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார். இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து, தீர்ப்பு கூறுவார் என்றும், அந்த நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் முடிவு செய்வார் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

இதையடுத்து, தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலாவை பரிந்துரை செய்து நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் உத்தரவிட்டார். இவ்வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என்ற தகவல் வெளியானது.

இதற்கிடையில், நீதிபதி எஸ். விமலா விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கை உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற கோரியும் தங்க தமிழ்செல்வன் தவிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் 17 பேர் உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட விடுமுறை கால டிவிசன் பெஞ்சானது, நீதிபதி விமலாவுக்கு பதிலாக, நீதிபதி என். சத்திய நாராயணன் மூன்றாவது நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்க நியமனம் செய்யப்பட்ட 3 வது நீதிபதி என். சத்திய நாராயணன் முன்பு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விசாரணையை இப்போதே துவங்க நீங்கள் ஆயத்தமாக உள்ளீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது தகுதி நீக்கம் செய்யபட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். நாங்கள் வாதத்தை முன் வைக்க தயாராக உள்ளோம் என ராமன் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி வழக்கு தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களே போதுமா, இன்னும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ராமன், இன்னும் ஒரு சில ஆவணங்களை கூடுதலாக தாக்கல் செய்ய உள்ளோம் என கூறினார்.

முதலமைச்சர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவை தலைவர், அரசு கொறடா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 23 ஆம் தேதிக்கு பிறகு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றனர்.

இதன் பிறகு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 23 ஆம் தேதி தள்ளிவைப்பதாகவும், அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கும் எனவும் அன்றிலிருந்து ஜூலை 27 ஆம் தேதிவரை தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் 5 நாட்களும் முழுவதும் விசாரணைக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி விசாரணை 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தங்க தமிழ்செல்வன் திரும்ப பெறவில்லை என அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 18 mlas disqualification case justice sathyanarayanan thanga tamilselvan

Next Story
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன : ஐகோர்ட்டில் அரசு தகவல்chennai high court news - 'ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது' - ஐகோர்ட் கடும் கண்டனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com