டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி என். சத்திய நாராயணன் முன்பு இன்று (ஜூலை 4) மாலை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் தினமும் விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு தரப்பு வழக்கறிஞர்கள் விவாதம் நடைபெறும். தேவையான பட்சத்தில் வழக்கறிஞர்களில் வாதத்திற்கு கூடுதல் நாட்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
முன்னர் தரப்பட்ட செய்தி கீழே..
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சானது, கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார். இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து, தீர்ப்பு கூறுவார் என்றும், அந்த நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் முடிவு செய்வார் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
இதையடுத்து, தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலாவை பரிந்துரை செய்து நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் உத்தரவிட்டார். இவ்வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என்ற தகவல் வெளியானது.
இதற்கிடையில், நீதிபதி எஸ். விமலா விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் 17 பேர் உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட விடுமுறை கால டிவிசன் பெஞ்சானது, நீதிபதி விமலாவுக்கு பதிலாக, நீதிபதி என். சத்திய நாராயணன் மூன்றாவது நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்க நியமனம் செய்யப்பட்ட 3 வது நீதிபதி என். சத்திய நாராயணன் முன்பு இன்று மாலை 4 மணிக்கு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடபட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 23 முதல் 27 வரை தினமும் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி முடிவு செய்தார்.