கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் மற்றும் சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என அடுத்தடுத்து தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவங்களின் எதிரொலியாக தமிழகத்தில் தற்போது 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் கடந்த ஒரு வார காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே தற்போது தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக (தெற்கு) இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, கண்ணன் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“