திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருடர்களை கண்காணிக்க 185 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட்டுகள், என்.எஸ்.பி.ரோடு, பெரிய கடைவீதி மற்றும் சின்ன கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுமார் 185-க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்தி கோயில் தெரு உள்ளிட்ட ஆறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணிக்கும் வகையில் தெப்பக்குளம் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கலந்து கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி முதன்முறையாக பெண் காவலர்கள் மஃப்டியில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளதாகக் கூறினார். பண்டிகையை கருத்திற் கொண்டு கூடுதலாக 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேரக்கட்டுப்பாடு குறித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தரப்பில் இருந்து அதற்காக ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, திருச்சி மாநகரில் உள்ள ஆயிரத்து 145 கண்காணிப்பு கேமராக்களில் 850 கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், ஆப்ரேஷன் அகழி திட்டத்தின் கீழ் தங்களது பணியை சீராக செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“