2004 ஆழிப் பேரலை தாக்குதலில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு, குளச்சல், மணக்குடி மீனவ கிராமத்தில் சுனாமியால் (ஆழிப் பேரலை) உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவிடத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Advertisment
கன்னியாகுமரியில் 2004ஆம் ஆண்டு கடலில் ஏற்பட்ட ஆழிப் பேரலை (சுனாமி) தாக்குதலின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொட்டில்பாடு, குளச்சல் மீனவ கிராமங்களை சேர்ந்த 612 பேர் உயிரிழந்தனர்.
நினைவு தூண்
குளச்சல் தேவாலைய முற்றத்தில் ஒரே கல்லரை குழியில் ஆண், பெண், சிறுவர்கள், சிறுமிகள் என 500 பேருக்கும் அதிகமானோரின் பூத உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
Advertisment
Advertisements
குறிப்பாக கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சுனாமி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 199 பேர் பலியாயினர். இவர்களின் நினைவாக கொட்டில்பாடு புனித அல்லேசியார் ஆலய வளாகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சுனாமி தாக்குதல் 18ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொட்டில்பாடு மீனவர்கள் சுனாமி காலனியிலிருந்து பங்குத்தந்தை தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கல்லறை தோட்டம் வரை மவுன ஊர்வலம் சென்றனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
இறந்தவர்களின் கல்லறைகளில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கொட்டில்பாடு புனித அல்லேசியார் ஆலயத்தில் சிறப்பு நினைவு திருப்பலி நடந்தது. இதில் சுனாமி தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் உட்பட திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் மலர் தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
குமரி மாவட்டத்தில் சுனாமி பேரலை தாக்குதலில் மரணம் அடைந்தவர்கள் நினைவாக கன்னியாகுமரி, கொட்டில்பாடு, குளச்சல் பகுதிகளில் நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கம் பகுதியில் அரசின் சார்பில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. காலம் எத்தனை கடந்தாலும் சுனாமியால் பலியான உறவுகளை மறக்கவே முடியாது என குமரி மீனவ சமூகத்தினர் வேதனை தெரிவித்தார்கள்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/