Advertisment

நடராஜனுக்கு உறுப்புகள் தானம் செய்த கார்த்திக்: பல தகவல்களை மறுக்கும் நண்பர்கள்!

வழக்கறிஞர் ஒருவர் 'சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றால், கார்த்திக்கை காப்பாற்றிவிடலாம். ரூ.8 லட்சம் வாங்கித் தருகிறேன் என்றார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடராஜனுக்கு உறுப்புகள் தானம் செய்த கார்த்திக்: பல தகவல்களை மறுக்கும் நண்பர்கள்!

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்புகளை தானம் செய்த கார்த்திக், சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அச்சகத்தில் பணிபுரித்து வந்திருக்கிறார். அதேசமயம், அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவது போன்ற பகுதி நேர வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

Advertisment

கார்த்திக்கின் பெயர் சொல்ல விரும்பாத நண்பர் ஒருவர் கூறுகையில், "பேனர்கள் வைக்க கார்த்திக் ரூ.50 வரை சம்பாதிப்பான். சில சமயம் ரூ.500 வரை கூட காசு பார்ப்பான். ஆனால், பெரும்பாலும் அவன் வேலை இல்லாமல் தான் இருப்பான்.

சுயநினைவே இல்லாமல், அக்டோபர் 4-ஆம் தேதி அவனை சென்னை கொண்டுச் சென்ற போது தான், அவன் முதன் முதலாக சென்னைக்கு வருகிறான். இதற்கு முன் அவன் சென்னை சென்றதேயில்லை. அவன் அறந்தாங்கியை விட்டு அதிகம் வெளியே போனதில்லை" என்றார்.

கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் ஹக்கிம் அராஃபத் கூறுகையில், "கார்த்திக் மரணம் அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, திருப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வேலைக்குச் சென்றான். ஆனால், மூன்று நாட்களுக்குள் திரும்பி வந்துவிட்ட கார்த்திக், தன்னுடைய பெற்றோருடன் இருக்க விரும்புவதாக கூறினான். அவனது பெற்றோரும் தினக்கூலி தான்.

செப்டம்பர் 30-ஆம் தேதி மதியம், நண்பரின் பைக்கில் கார்த்திக் சென்ற போது, அவனது வீட்டிற்கு அருகிலேயே கார் ஒன்றில் மோதி படுகாயம் அடைந்தான். அவனது தலை, முகம் மிகவும் மோசமாக அடிப்பட்டு இருந்தது. பல இடங்களில் எலும்புகள் உடைந்திருந்தது. உடனே, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அவனை தூக்கிச் சென்றோம், அதன்பின் அதேநாளில் அடுத்தடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தஞ்சை அரசு மருத்துவமனைக்கும் கொண்டுச் சென்றோம்" என்றார்.

அராஃபத் மற்றும் மேலும் இரண்டு நண்பர்கள், கார்த்திக் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது வரை கூடவே இருந்திருக்கின்றனர்.

தொடர்ந்து அராஃபத் பேசுகையில், "விபத்திற்கு பிறகு, கார்த்திக்கின் நினைவு திரும்பவேயில்லை. தஞ்சையில் எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனை பார்த்தபின், கார்த்திக்கை காப்பாற்ற ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதை நாங்கள் கார்த்திக்கின் பெற்றோரிடம் கூறவில்லை. டாக்டர்களிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டோம்" என்றார்.

கார்த்திக்கின் மூத்த சகோதரியின் கணவர் சுரேஷ் நம்மிடம் பேசுகையில், "நாங்கள் ஹெலிகாப்டர் மூலம் கார்த்திக்கை சென்னைக்கு கொண்டுச் செல்லவில்லை. சாலை வழியாக தான் நாங்கள் ஆம்புலன்சில் கொண்டுச் சென்றோம். ஆனால், அப்போது நான் உடன் இல்லை. நான் வெளியூரில் இருந்தேன். வழக்கறிஞர் ஒருவர் எங்களிடம் 'சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றால், கார்த்திக்கின் உயிரை காப்பாற்றிவிடலாம். விபத்தை காரணமாக வைத்து ரூ.8 லட்சம் வரை வாங்கித் தருகிறேன்' என்று கூறினார்.

இதனால் "டாக்டர்களின் ஆலோசனைக்கு எதிராக" தஞ்சையில் இருந்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் கார்த்திக்கை கொண்டுச் சென்றோம்" என்றார்.

தஞ்சை மருத்துவ கல்லூரி டீன் டாக்.எஸ் ஜெயக்குமார் கூறுகையில், "நடராஜனுக்கு கார்த்திக்கின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதை மீடியாவின் மூலம் தான் நான் தெரிந்து கொண்டேன். டாக்டர்கள் அவரது நிலை பற்றி அவரது நண்பர்களிடம் என்ன சொன்னாலும், கார்த்திக் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்க மருத்துவமனையிடம் அங்கீகரிக்கப்பட்ட குழு இல்லை" என்றார். கார்த்திக் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என முடிவு செய்த பின், மருத்துவமனை தனது உள் ஒதுக்கீடு மூலம் அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தது. நடராஜனும் அதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கார்த்திக் நண்பர் அராஃபத் கூறுகையில், " அக்.3-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், தஞ்சை மருத்துவ நிர்வாகத்திடம் நாங்கள், 'கார்த்திக்கை மேல் சிகிச்சைக்கு திருச்சி கொண்டுச் செல்கிறோம்' என்றோம். ஆனால், டிஸ்சார்ஜ் நடவடிக்கைகளை முடித்த போது, சென்னைக்கு கொண்டுச் செல்லலாம் என முடிவெடுத்தோம். சென்னையில் நம்பர்.1 மருத்துவமனை எதுவென்று தேடினோம். இறுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த  அப்போலோ மருத்துவமனை மற்றும் குளோபல் மருத்துவமனை ஆகியவற்றை பரிசீலனை செய்து, குளோபல் மருத்துவமனையை தேர்வு செய்தோம்.

இரவு 10.30 மணிக்கு, சென்னைக்கு சாலை வழியாக நாங்கள் சென்றோம்.

அக்.4-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் கார்த்திக்கை அனுமதித்தோம். மாலை 4.30 மணியளவில், கார்த்திக் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் எங்களிடம் கூறினர். அப்போது, உறுப்புகள் தானம் குறித்தும் எங்களுக்கு எடுத்துரைத்தனர். கார்த்திக்கின் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்" என்றார் அராஃபத்.

மாநில உறுப்பு மாற்று ஆணைய தலைவர் டாக். பி பாலாஜி கூறுகையில், "அக்.4-ஆம் தேதி மாலை 2.07 மணியளவில் கார்த்திக்கின் மூளைச் சாவு குறித்து எங்களுக்கு முதன்முதலாக தகவல் கிடைத்தது. குளோபல் மருத்துவமனையில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டது. மூளைச் சாவை உறுதி செய்வதற்கான இரு சோதனைகள் காலை 10.38 மணிக்கும், மாலை 6.04 மணிக்கும் நடத்தப்பட்டது. கார்த்திக்கின் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் ஆவணம் எங்களுக்கு இரவு 9.46 மணிக்கு கிடைத்தது.

மறுநாள், கார்த்திக்கின் இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் மூன்று நோயாளிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது என குளோபல் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்போது நடராஜனின் பெயர் பல்லுறுப்பு காத்திருப்பு பட்டியலில் முதலிடத்தில் இருந்ததால், அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகள் தானம் செய்ய முன்னுரிமை கொடுக்கப்பட்டது. உறுப்பு மாற்று கோரி ஏப்ரல் 14-ஆம் தேதி நடராஜன் பதிவு செய்திருந்தார்" என மருத்துவர் பாலாஜி கூறினார்.

கார்த்திக்கின் இதயம் தமிழகத்தைச் சேர்ந்த 43 வயதான நபருக்கும், நுரையீரல் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது நபருக்கும் தானமாக கொடுக்கப்படுவதாக குளோபல் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்தது.

கார்த்திக் சகோதரியின் கணவர் சுரேஷ் கூறுகையில், "சில படங்களை பார்த்து, அதன் மூலம் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என கார்த்திக் எப்போதும் விரும்பினான்" என்றார்.

கார்த்திக் நண்பர் அராஃபத் கூறுகையில், "கார்த்திக்கின் உறுப்புகளால் பலர் வாழ்க்கை பெற்றுள்ளனர் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவனது இளைய சகோதரிக்கு வேலையில்லை. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. அரசாங்கம் அவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment