அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ2.16 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையானது நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்களிலும், சென்னையில் 14 இடங்களிலும், ஈரோட்டில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், கோவை மற்றும் கரூரில் தலா 2 இடங்களிலும், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர், பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் என 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 69 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம், 1 கிலோ 130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம், சான்று பொருள்களான கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil