Tamilnadu Weather | தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது என பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது. வரும் 23ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்ட மக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குமரி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில், 10 பேரிடர் மீட்பு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் நாளை (மே21,2024) அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, நாளை மறுதினம் (மே22,2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“