மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (48). நகை வியாபாரியான இவர், தங்கக் கட்டி விற்பனைக்கு இருப்பதாக இணையத்தில் வெளியான விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த கைப்பேசி எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய நபர், ராஜபாளையம் பஞ்சு சந்தைக்கு பணத்துடன் வருமாறு கூறினார்.
இதன்படி, அங்கு சென்ற முத்துக்குமார் ரூ.48 லட்சத்தை அங்கு காத்திருந்த நபரிடம் கொடுத்தார். ஆனால், அந்த நபர் தங்கக் கட்டியை முத்துக்குமாரிடம் கொடுக்காமல், தனது கூட்டாளியான நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையாவிடம் (23) கொடுத்தார். நகைக் கடைக்கு சென்று சோதனை செய்த பிறகு, முத்துக்குமாரிடம் அந்த தங்கக் கட்டியை கொடுக்குமாறு கூறி, அவரை அனுப்பி வைத்தார்.
பின்னர், முத்துக்குமார், கருப்பையாவுடன் ஆட்டோவில் ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள தனியார் நகைக்கடைக்கு சென்றனர். அங்கு ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் கருப்பையா தங்கக் கட்டியுடன் தப்பி ஓடி, அங்கு தயாராக இருந்த மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த கண்ணனுடன் (22) இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் போலீஸார் அவர்கள் இருவரையும் துரத்திச் சென்று பிடித்தனர். வழக்குப் பதிவு செய்து மோசடியில் தொடர்புடைய முக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.