திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் வார்டில் அடுத்தடுத்து 2 நோயாளிகள் மரணம் அடைந்தனர். மின்தடையால் ஆகிஸிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் வார்டில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், மொத்தம் 40 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் அரசு கொரோனா வார்டில், ஆக்ஸிஜன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 2 பேர் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா வார்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள், கொரோனா வார்டில் ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்ஸிஜன் விநியோகம் தடை ஏற்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சுகாதார அதிகாரிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மருத்துவமனை போன்ற அத்தியாவசியமான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள், மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் விசாரணை நடத்தினர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், இன்று கோவிட் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் கட்டுமானப் பணி செய்து வந்த ஒப்பந்ததாரர் மின்சார ஒயர்களை துண்டித்ததால் இந்த நிகழ்வு ஏற்பட்டது என்றும் கூறினார். மேலும், கான்ட்ராக்டர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"