/tamil-ie/media/media_files/uploads/2021/03/covid-27.jpg)
Covid19 Positive : கோயம்பேடு காய்கறி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்ட இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சரியான தகவல்களை சோதனை மையத்தில் வழங்காததால் அவர்களை கண்டறிய முடியவில்லை. கடந்த ஆண்டு மிகப்பெரிய கொரோனா தொற்று மையமாக காய்கறி சந்தை விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்விரண்டு நபர்கள் மீதும் சென்னை மாநகராட்சி வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அறிவிப்புப்படி நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 நபர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவர்கள் குறித்த தகவல் பதிவில் முகவரி வழங்கவில்லை. கோயம்பேடு சந்தையை முகவரியாக கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்த அலைபேசி எண்கள் “ஸ்விட்ச் ஆஃப்” ஆகியுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்
சமீப காலத்தில் கோயம்பேடு காய்கறி சந்தையில் பதிவான முதல் கொரோனா நோய் தொற்று இதுவாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இனி கோயம்பேடு சந்தையில் சோதனை மேற்கொள்ள வரும் அனைவரிடமும் அவர்களின் அடையாள அட்டை நகல் கேட்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அடையாள அட்டை இல்லாத மூட்டை தூக்கும் ஊழியர்கள் அவர்கள் வேலை பார்க்கும் கடையின் முகவரியை தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“முகக்கவசம் இல்லை என்றால் விற்பனை இல்லை” என்ற கொள்கையை தீவிரமாக வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் அதிகாரிகள். நாள் ஒன்றுக்கு மகாராஷ்ட்ராவில் இருந்து 25 முதல் 30 லாரிகளில் வெங்காயம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அனைத்து வாகனங்களும் முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.