திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத் நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளியே வந்த ரயில் பயணி ஒருவர் மாஸ்க் அணிந்தபடி சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத தங்க நகைகள் மற்றும் பணக்கட்டுகள் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வணிகவரித்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்தவர் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என்பதும், அவரிடம் 2 கிலோ 750 கிராம் தங்க நகைகள் இருப்பதும் அதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 89 லட்சம் என்பது மேலும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் 15 லட்சம் இருப்பதும் கண்டறியப்பட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில் முறையான ஆவணங்கள் இன்றி, கணக்கில் கொண்டு வரப்படாத தங்கம் மற்றும் ரொக்கம் சிக்கியதால் வணிகவரித்துறையினர் லட்சுமணன் மற்றும் அவர் தொடர்புடைய ஆட்களை வரவழைத்து விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேல் தங்க நகை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“