Advertisment

ஒரே நாளில் பட்டப் பகலில்... தமிழகத்தை உலுக்கிய 2 கொடூர சம்பவங்கள்: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

தமிழகத்தில் ஒரே நாளில் 2 கொடூர கொலை அரங்கேறியிருப்பது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தஞ்சாவூரில் ஒரு தமிழ் ஆசிரியையும், ஓசூரில் வழக்கறிரும் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2 killings in one day TN Thanjavur govt school teacher and hosur advocate death political leaders reaction Tamil News

"தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது." என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 2 கொடூர கொலை அரங்கேறியிருப்பது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தஞ்சாவூரில் ஒரு தமிழ் ஆசிரியையும், ஓசூரில் வழக்கறிரும் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

ஆசிரியை படுகொலை 

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அதே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மதன்குமார் (30). இவர் ரமணியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மதன்குமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி (வயது 26) பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் குத்தியவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரத்த வெளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த  ஆசிரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஆசிரியை ரமணி மரணம் அடைந்தார்.

கத்தியால் குத்தியவனை கைது செய்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ஆசிரியையின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன் குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆசிரியை ரமணியை கொலை செய்த மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூரில் கொடூரம் 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஏரி தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், இவர் ஒசூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள பிரபல வழக்கறிஞர் சத்திய நாராயணா என்பவரிடம் ஜூனியராக வழக்கறிஞராக உள்ளார்.இதேபோல், ஓசூர் நாமல்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தகுமார். இவர் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், வழக்கறிஞர் கண்ணன், வழக்கம் போல, ஒசூர் நீதிமன்றத்தில் பணியை முடித்து வழக்கறிஞர் ஆடையுடன் நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்றார். அப்போது, அங்கே வந்த ஆனந்த்குமார் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். கண்ணன் அங்கிருந்து ஓட முயன்றபோதும் இவர் துரத்தி வெட்டியுள்ளார். இதில் வழக்கறிஞர் கண்ணனுக்கு, கழுத்து, தலை, முதுகு உள்பட 5 இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். பரபரப்பாக இருக்கும் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நடந்தபோது, யாரும் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அரிவாளாள் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்துச் சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் வழக்கறிஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் தலைவர்கள் கண்டனம் 

இந்த நிலையில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள் பின்வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி

ஆசிரியை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

தி.மு.க. ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறி உள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தி.மு.க. முதல்-அமைச்சர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆசிரியை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்," என்று பதிவிட்டுள்ளார்.

டி.டி.வி. தினகரன்

ஆசிரியை படுகொலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில், "தஞ்சாவூரில் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியை குத்திக் கொலை - தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது .

எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி 

ஓசூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், மு.க ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. 

விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் 

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே தஞ்சாவூருக்கு அருகில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். மக்களிடமிருந்தும், தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் முதலமைச்சர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதலமைச்சர் செல்லவில்லை. காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று உயர்நீதிமன்றம் இன்று வினா எழுப்பியுள்ளது. நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.

காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."என்று அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை

இரண்டு கொடூர சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார், ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது. 

தமிழகத்தை சட்டமற்ற காட்டாக மாற்றியதற்கு மு.க ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளை திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்ட விரோதத்தை நாம் காண முடியாது."என்று அவர் கூறியுள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Murder Thanjavur Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment