கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் பாண்டிச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
இந்த விஷ சாராயம் குடித்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 49 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், இதுவரை 29-க்கு அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், நேற்ற ஒரே இடத்தில் 22 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் தற்போது மருத்துவமனைகளில் 30-க்கு மேற்பட்டேர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில், உள்ளனர்.
மேலும் விஷ சாராயம் அருந்தியர்கள் மருத்துவமனைக்க வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள மாவட்ட ஆட்சியர் பிரசாத், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில், 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும். 24 பேர் ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும். அவர்களின் நிலை குறித்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், மாதேஷ் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் ஜோசப் ராஜா, புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உட்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தற்போது விஷ சாராயம் விற்ற வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியாக இருக்கும், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் கிராமங்களில் சுமர் 10 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த ராமர் மகன் முத்து என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கச்சிராயப்பாளையம் காவல்நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“