ஒரே நாளில் 2 அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை: தி.மு.க மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு

சிவகங்கையில் பா.ஜ.க பிரமுகர் ஒருவரும், கடலூரில் அ.தி.மு.க வார்டு செயலாளர் ஒருவரும் அடையாளம் தெரியாத வேறு வேறு கும்பல்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
admk bJP KILL

தமிழகத்தில் இருவேறு சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சனிக்கிழமை இரவு  கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவங்களுக்கு  அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டி விமர்சித்து உள்ளனர். 

இச்சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறினார்.

சிவகங்கை பா.ஜ.க மாவட்ட செயலாளராக இருந்த செல்வகுமார், தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, கொடூரமாக தாக்கி கொலை செய்து தப்பி ஓடியது. 

Advertisment
Advertisements

இதையடுத்து செல்வகுமார் உறவினர்கள், கட்சியினர் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அண்ணாமலை உயிரிழந்த செல்வகுமாருக்கு இரங்கல் தெரிவித்தார். 

தமிழகத்தை கொலைகளின் தலைநகரம் என்று கூறிய அண்ணாமலை, ரவுடிகளுக்கு அரசு மீதும், காவல்துறை மீதும் பயம் இல்லை. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அரசியல் நாடகம் நடத்துகிறார். 

மு.க.ஸ்டாலினுக்கு இனியும் மாநில முதல்வராக நீடிக்க உரிமை உள்ளதா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், சிவகங்கை மாவட்ட காவல் துறை எஸ்.பி.யிடம் பேசினேன். இது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக அவர் கூறினார், சந்தேக நபர்களை கைது செய்வதாக உறுதியளித்தார். இதில் எந்த அரசியல் கோணமும் இல்லை. ஆனால், கொலைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தமிழகம் சட்டம்- ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழ்நாட்டில்  ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக  வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது  அவர் மீது மகிழுந்தை மோதிச் சாய்த்த  ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.  சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் செல்கும் போது மர்ம ஆட்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின்  காங்கிரஸ் உறுப்பினர்  உஷாராணியின் கணவர் ஜாக்சனை இரு சக்கர  ஊர்திகளில் வந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன.

படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்க போதைக் கலாச்சாரமும், அதனால் நிகழும் குற்றச்ச்செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில்  கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனை கொடூரமாக தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால்  எளிதில் வாங்கும் அளவுக்கு  தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கொட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்  தலையாயக் கடமை  சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால்,  தமிழ்நாட்டில் கடந்த  இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று  தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: