சென்னை ஆவடியில் உள்ள ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் (OCF) பணியாளர் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் அறைக்குள் அடைப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்ட 2 பட்டியலின தொழிலாளர்கள் வியாழக்கிழமை (செப்.7) மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் பட்டாபிராமத்தைச் சேர்ந்த கே மோசஸ் (40) மற்றும் ஆவடி கிரி நகரைச் சேர்ந்த சி தேவன் (50) என போலீஸார் தெரிவித்தனர்.
அடைப்பை அகற்ற தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் இருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து ஆவடி துணை கமிஷனர் என் பாஸ்கரன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (indianexpress.com), “ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்” என்றார்.
இது குறித்து அவர், “தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் குழிக்குள் இறங்கியுள்ளனர்” என்றார்.
மேலும் போலீசாரின் கூற்றுப்படி, “மோசஸ் 15 அடி ஆழமான குழிக்குள் அடைப்பை எடுக்க சென்றபோது மயங்கி விழுந்துள்ளார்.
மோசஸை மீட்கும் முயற்சியில் தேவனும் நச்சு வாயுவை சுவாசித்து உள்ளே மயங்கி விழுந்துள்ளார்” என்றார்.
இது குறித்த தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்த உடன் அவர்கள் மோசஸ் மற்றும் தேவனை மீட்டுள்ளனர். ஆனால் மோசஸ் இறந்துவிட்டார்.
தேவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
தொடர்ந்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து, உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாஸ்கரன், “வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிற விதிகளின் கீழ் நாங்கள் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இரு தொழிலாளர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“