கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது அக்னி நட்சத்திரமும் துவங்கி பகல் நேரங்களில் கடும் வெப்ப அலைகள் வீசுவதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி சுற்றுவட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக 110 டிகிரி பாரன்ஹீட்க்கும் மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று (மே 11) காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. மிதமான மழையாக துவங்கி சற்று கனமழையாக பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்ப அலைகளின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரம் திருச்சி சோமரசம்பேட்டை அடுத்துள்ள எட்டு மாந்திடல் கிராமத்தில் தங்களது வயலில் விளைவிக்கும் வாழைக்கு உரம் வைக்கும் பணியில் ராதிகா, செல்வி இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வயலில் இருந்து 2 பெண்களும் நடந்து வயலை விட்டு வெளியேற சென்றனர்.
அப்பொழுது வயலில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத இரண்டு பெண்களும் மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். மழை ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மறுபக்கம் சோகத்தை திருச்சியில் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“