scorecardresearch

நூடுல்ஸ் சாப்பிட்டு இறந்த சிறுவனின் உடலில் காயங்கள்; மரணத்தில் புதிய சர்ச்சை

குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நூடுல்ஸ் சாப்பிட்டு இறந்த சிறுவனின் உடலில் காயங்கள்; மரணத்தில் புதிய சர்ச்சை

திருச்சி தாளக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய் தருண். 2 வயது நிரம்பிய இவன் படும் சுட்டியாகவே இருந்திருக்கின்றான்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி குழந்தைக்கு நூடுல்ஸ் உணவு தயாரித்து கொடுத்துள்ளார். மீதமிருந்த நூடுல்ஸை ப்ரிட்ஜ்ஜில் வைத்த அவர் மறுநாள் காலையும் அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கொடுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே குழந்தைக்கு உடலில் அலர்ஜி காரணமாக சிறுசிறு புண்கள் ஏற்பட்டு இருந்தன. அதற்கு மகாலட்சுமி உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை மிகவும் உடல் சோர்வாக காணப்பட்டது. 

மேலும் அன்று மாலை வாந்தி எடுத்த சாய் தருண் சிறிது நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மகாலட்சுமி, குழந்தையை தூக்கிக் கொண்டு டோல் கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதாக கூறினார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். 

 இதற்கிடையே குழந்தை இறந்தது குறித்த தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சாய் தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தாய் மகாலட்சுமி நூடுல்ஸ் சாப்பிட்டதால் குழந்தை இறந்து விட்டதாக போலீசாரிடம் கூறினார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை இன்று காலை நடைபெற்று முடிந்தது. இதில் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற மகாலட்சுமி, குழந்தையையும் தூக்கி சென்றார். அப்போது ரத்த அழுத்தம் காரணமாக மகாலட்சுமி திடீரென்று குழந்தையுடன் மயங்கி விழுந்துள்ளார். இதில் குழந்தைக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் குழந்தை சாய் தருண் தனது வீட்டின் அருகே மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியபோதும் கீழே விழுந்துவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதில் குழந்தைக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும், சர்ச்சையும் உருவாகி இருக்கிறது. இது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வயது குழந்தையின் சாவுக்கு என்ன காரணம் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல் 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 2 year old boy death scar marks in his body