தீபாவளி உனக்காக காத்திருக்கிறது; எழுந்து வா சுஜித்! – 100 அடி ஆழத்தில் மௌனம் ஏன்?

இரண்டு கைகள் மட்டுமே வெளியே தெரிய, அதிகாலை 3.30 மணியிலிருந்து அழுகை, அசைவு என்று எந்தவித சமிக்ஞையும் தராமல் அமைதியாய் இருக்கிறான்

By: Updated: October 28, 2019, 05:51:50 PM

நாள் : 25-10-2019

நேரம் : மாலை 5.30 – 5.40

இடம்: சோளத்தட்டை தோட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமம், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

வானம் பார்த்த பூமியில் வருமானம் பார்க்க, தன் தந்தை ஆரோக்கியராஜ் உருவாக்கிய சோளத்தட்டை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் 2 வயதே ஆன சுஜித்.

அவ்வப்போது பெய்த மழையால், தோட்டமெங்கும் கால் பதிக்கும் இடமெல்லாம் சேற்றின் வாசம். அதில் பயமறியா மழலை அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருக்க, அங்கு புதர்களுக்கு இடையே காத்திருந்தது, 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டி மூடப்பட்டிருந்த 600 அடி பள்ளம்.

அத்தனை இடங்களில் கால்கள் பதித்த சுஜித், அந்த இடத்திலும் கால் பதிக்க, தான் தாய் கலாமேரி கண் எதிரே பூமி அன்னையின் கோர பள்ளத்தில் வீழ்கிறான்.

முதலில் 5 அடி, பிறகு 20 அடி, பிறகு 30  அடி என்று பள்ளம் அவனை மெல்ல மெல்ல விழுங்க, தாய் கலாமேரியின் அலறல் சத்தம், தமிழகத்தின் மத்திய பகுதியையே அதிர வைத்தது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியவர்கள், இந்த நொடி வரை அங்கு தான் இருக்கின்றனர்.

குழந்தை குழிக்குள் விழுந்ததில் இருந்து, அவனை மீட்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகிறது.

இந்நிலையில், கோவை கற்பக விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஸ்ரீதர் தலைமையிலான மீட்புக்குழுவினர், ஆழ்துளைக் கிணற்றில், குழந்தைக்கு அடியில் துணிப்பையை வைக்க முனைந்தால் பையுடன் குழந்தையை மேலே கொண்டு வரலாம் என யோசனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, துணிப்பை தைக்க அவர்கள் ஆட்களைத் தேடியபோது, சுஜித்தின் தாயார் கலைராணியே தையல்காரர் எனத் தெரியவந்தது.

இதன்பின், “என் பிள்ளைக்காக நானே துணிப்பை தைத்துக் கொடுக்கிறேன்,” எனக்கூறிய கலைராணி, தன் மகன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சோகத்திலும் துணிப்பையைத் தைத்து மீட்புக்குழுவினரிடம் கொடுத்தார்.

எனினும், அந்தப் பையை குழந்தை சுஜித்துக்குக் கீழ்ப்பகுதியில் திணிக்க முடியாமல் போனது. மண் சரிந்து குழந்தையின் மேல் விழுந்ததால், அம்முயற்சியை மீட்புக்குழுவினர் கைவிட்டனர்.

இப்போது, 24 மணி நேரம் கடந்துவிட்டது. இன்னமும் சுஜித்தை மீட்க முடியவில்லை.

மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு என எவர் முயற்சி செய்தும் சுஜித்தை மீட்க முடியவில்லை.

இந்த நொடி, சுஜித் இருக்கும் ஆழம் 100 அடி. அவன் தலைக்கு மேல் சேறும் சகதியுமான மண் கொட்டியுள்ளது. இரண்டு கைகள் மட்டுமே வெளியே தெரிய, இன்று அதிகாலை 3.30 மணியிலிருந்து அழுகை, அசைவு என்று எந்தவித சமிக்ஞையும் தராமல் அமைதியாய் இருக்கிறான்.


நேற்று இரவு வரை ”அம்மா இருக்கிறேன். பயப்படாதே” என்று தாய் கூறிய குரலுக்கு ‘ம்’ என்று பதில் அளித்து வந்தான்.

உணவு, உறக்கம், தண்ணீர் இன்றி அவனை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற வேட்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மீட்புக் குழுவுக்கும், நான் பெற்ற மகனே என்று உள்ளம் கொதிக்க துடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும் அவன் இன்று எந்த நேர்மறை செய்தியையும் கொடுக்கவில்லை.

இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்தார்களோ என்னவோ, குழந்தை விழுந்த பள்ளத்தின் அருகே 3 மீ தொலைவில், 100 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம், இரு வீரர்கள் உள்ளே சென்று, 100 அடி ஆழத்தில் பக்கவாட்டில் மற்றொரு குழி உருவாக்கி, சுஜித்தை தங்கள் கைகளில் ஏந்த ஆயத்தமாகிவிட்டனர்.

போர் போடும் இயந்திரம் வந்து, அதன்பிறகு நான்கு மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றினால் தான் 100 அடி ஆழத்திற்கு துளையிட முடியும். அதன்  பிறகு, பத்திரமாக குழிக்குள் வீரர்கள் சென்று, மீண்டும் பக்கவாட்டில் குழி ஏற்படுத்தி, அதன் பிறகு சுஜித்தை கண்டுபிடித்து அவனை மீட்க வேண்டும்.

விடிந்தால் தீபாவளி… விடியும் பொழுதில் சுஜித் இந்த உலகை சுவாசித்துவிட்டால், அது தான் நமக்கு உண்மையான தீபாவளி!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:2 years old surjith wilson trichy borewell rescue operation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X