தொடர்கதையாகும் பட்டாசு ஆலை விபத்துகள்… என்ன செய்யப்போகிறோம்? எவிடென்ஸ் கதிர் கேள்வி

வருடம்தோறும் பட்டாசு தொழிற்சாலை விபத்து 5 – 6 சம்பவங்களாவது நடக்கிறது. ஓவ்வொரு விபத்திலும் சராசரியாக 15 – 20 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால், ஏன் இது போன்ற விபத்தினை தடுக்க முடியவில்லை? – எவிடென்ஸ் கதிர் கேள்வி

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடைபெறுவதும் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனாலும் இந்த பட்டாசு ஆலைகள் வெடி விபத்து பலிக்கு முடிவு கட்ட முடியாமல் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குருங்குடியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அடுத்த 6 மாதங்களில் 2021, பிப்ரவரி 12ம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர், குத்தகைதாரர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில்தான், பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதும் இழப்பீடு வழங்குவதும் மட்டுமே அரசின் கடமை முடிந்துவிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்து அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த எவிடென்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு பட்டாசு ஆலைகளைக் குறித்தும் அதில் நடக்கும் விபத்துகளைக் குறித்தும் விபத்தின் அரசியல் என்று எழுதியுள்ளார்.

விபத்தின் அரசியல்

சதை பிண்டமாக மூச்சு இழுத்தவாறு அண்ணாந்து பார்த்தவாறே நிலை குத்தி வாழை இலையில் கிடக்கும் ஜெயாவை…

Posted by Vincent Raj on Saturday, 13 February 2021

இது குறித்து எவிடென்ஸ் கதிர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “சதை பிண்டமாக மூச்சு இழுத்தவாறு அண்ணாந்து பார்த்தவாறே நிலை குத்தி வாழை இலையில் கிடக்கும் ஜெயாவை பார்த்தேன். அம்மா என்றேன். என் பக்கம் அவர் திரும்பவில்லை. நான் அழைத்தும் அவருக்கு உணர்வு இல்லை. புரிந்தது. உயிரை பிடித்து கொண்டு இருக்கிறார். 75 சதவீத தீ காயம். உறவினர்கள் கலங்கி நின்றனர். பேச்சே இல்லாமல் ஆறுதல் படுத்தினேன்.

இது போன்று 3 – 4 பேர் இருக்கிறார்கள். அவர்கள் பிழைப்பார்களா? அருகில் இருந்த ஒரு தங்கை கேட்டார். அமைதியாக நின்றேன்.

நேற்று 12 பிப்ரவரி 2021 அன்று சாத்தூர் – அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலையில் பலமான சத்தம். அங்கு உள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியது. கட்டடங்கள் நொறுங்கின. ஒரே புகை மண்டலம். சதை கிழிந்து இரத்தம் வழிந்த நிலையில் தொழிலாளர்கள். சிறிது நேரத்தில் நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தது. 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலரும் காயம் அடைந்து உள்ளனர்.

இதை பட்டாசு விபத்து என்று எளிதாக கடந்து விட முடியுமா? அப்பட்டமான பண வெறி பிடித்த படுகொலைகள். என்ன நடந்தது? ஆய்வில் ஈடுபட்டது எவிடென்ஸ் குழு.

சுமார் 43 அறைகள் கொண்ட இந்த பட்டாசு தொழிற்சாலையில் 130 – 150 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்து உள்ளனர். ஆனால், 50 – 60 தொழிலாளர்கள்தான் வேலை செய்ய வேண்டும். தொழிலாளர்களின் வறுமையை புரிந்து கொண்டு மலிவான கூலியில் வேலைக்கு அமர்த்தி உள்ளனர். பெண் தொழிலாளர்களுக்கு ரூ.200 கூலி. ஆண் தொழிலாளர்களுக்கு ரூ. 300 கூலி. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை.

வருகை பதிவேடு, சம்பள பதிவேடு, தொழிலாளர்கள் பதிவேடு என்று எதுவும் இல்லை. இந்த தொழிற்சாலையின் முதலாளி 5 பேருக்கு குத்தகைக்கு விட்டு இருக்கிறார். அந்த 5 பேரும் ஒப்பந்தக்காரர்களை பிடித்து அவர்கள் மூலமாக தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். 16 – 17 வயது இளம் சிறார்கள் நிறைய பேர் வேலையில் உள்ளனர். தீ காயங்களுடன் சிகிச்சை எடுத்து வரும் முத்துபாண்டிக்கு 17 வயது. முத்து குட்டிக்கு 18 வயது. இருவரும் 4 – 5 வருடங்கள் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். ஆபத்தான தொழில்களில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த கூடாது. ஆனால் இங்கு எதுவும் இந்த விதிகள் கடைபிடிப்பது கிடையாது.

விபத்து ஏற்பட்டால் அதை தடுக்க தண்ணீர் கூட கிடையாது. தொழிலாளர்களுக்கே தண்ணீர் இல்லை. பிறகு எப்படி தீயை அணைக்க தண்ணீர் வைத்து இருப்பார்கள் என்று சிகிச்சை பெற்று வரும் மேரி எழுப்பும் கேள்விக்கு பதில் இல்லை.

தொழிலாளர்கள் பாதுகாப்பு, நலம் சார்ந்த எந்த திட்டமும் இங்கு இல்லை. கொத்தடிமை சந்தை போன்ற ஒரு தொழிற்சாலை. இறந்து போன 19 பேரில் 10 பேர் தலித்துகள். தனியார் மருத்துவமணை ஒன்றில் சிகிச்சை எடுத்துவரும் 7 பேரும் தலித்துகள்.

விபத்து பிற்பகல் 1 மணிக்கு நடந்து இருக்கிறது. சுமார் 45 நிமிடம் கடந்துதான் தீ அணைப்பு துறையினர் வந்து இருக்கின்றனர். பலரை பொது மக்கள் காப்பாற்றிதான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

வருடம்தோறும் பட்டாசு தொழிற்சாலை விபத்து 5 – 6 சம்பவங்களாவது நடக்கிறது. ஓவ்வொரு விபத்திலும் சராசரியாக 15 – 20 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால், ஏன் இது போன்ற விபத்தினை தடுக்க முடியவில்லை?

எல்லாம் ஊழல்தான். ஆனால், இவற்றை வெறும் வணிக ஊழலாக மட்டும் சுருக்கி பார்க்க முடியாது.மனிதர்களை சுரண்டி பிழைக்கும் மானுட விரோத ஊழல். சட்டத்திற்கு புறம்பாக மிகுதியான தொழற்சாலைகள் உள்ளன. அடிமாட்டு விலைக்கு வாங்குவது போன்று தொழிலாளர்களை வாங்கி கடும் உழைப்பை சுரண்டுவது அப்பட்டமான மனித விரோத செயலாகும்.

சில பெரிய நிறுவனங்கள் ஏன் தரத்தோடு இயங்குகின்றன? அங்கு சுரண்டல் இல்லாமல் இல்லை. குறைந்த பட்சம் உயிர்க்கு உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், இங்கு இல்லை.

வறுமையில் மக்கள் உள்ளனர். குறைந்த கூலிக்கு மக்கள் இருக்கின்றனர். தூண்டிலை வீசுகிறார்கள். அவர்கள் நிர்பந்தத்திற்கு எல்லாம் அடிபணிகிறார்கள். கடைசியில் உயிரையே கொடுக்கின்றனர். இது போன்ற துயரத்தை சட்டத்தின் மூலம் சரி செய்ய முடியாதா?

இந்தியாவில் தொழிலாளர்கள் சார்ந்து 44 சட்டங்கள் இருந்தன. அவற்றை சுருக்கி Labour Code 4 என்று 4 சட்டங்கள் மட்டுமே கொண்ட மசோதாவை கடந்த 2020 செப்டம்பரில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து இருக்கிறது. அதில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக பல சாராம்சங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பட்டாசு தொழில் சாலையை தொழிற்சாலை ஆணையர் தீடிரென்று விசிட் செய்யலாம் என்று இருந்தது. இப்போது அப்படி செய்ய முடியாது. தகவல் தெரிவித்து விட்டுத்தான் விசிட் செய்ய வேண்டும் என்று மாற்றி இருக்கின்றனர். முன் அறிவிப்பு இன்றி தொழிலாளர்களை பணியை விட்டு நீக்கலாம் என்றும் இருக்கிறது. தொழிலாளர்கள் பெயரில் இருக்கும் முதலாளி சட்டமாகவே இவைகள் இருக்கின்றன. என்ன செய்ய போகிறோம்?” என்று எவிடென்ஸ் கதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 20 people killed in sattur firecracker factory blast evidence kathir rises questions

Next Story
இலங்கை தமிழர்கள் சமத்துவம், சமநீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை: பிரதமர் மோடிpm narendra modi chennai visit, pm modi speaks in chennai, pm modi speaks on sri lankan tamil people issue, modi speak on fishermen issue, பிரதமர் மோடி சென்னை வருகை, பிரதமர் மோடி உரை, இலங்கை தமிழர்கள், modi speaks in chennai, modi inaugrated govt schems, pm modi laid many projects in chennai, pm modi speech, மோடி மீனவர்கள் பற்றி பேச்சு, modi speech in chennai, pm modi quotes bharathiyar poems, pm modi quotes avvaiyar poems, தேவேந்திர குல வேளாளர், devendra kula velalar name
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express