தீபாவளி பண்டிகையையொட்டி அரசு, பொதுத் துறை, தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் தொகை அறிவித்து வருகின்றனர். இது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போலவே டாஸ்மாக் பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தி வந்தனர். இதனால் ஏற்கனவே அரசு அறிவித்திருந்த போனஸ் தொகையையும் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து கடந்த 3-ம் தேதி மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கங்கள் உள்பட 21 டாஸ்மாக் சங்க பிரதிநிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 20% போனஸ் என்ற பணியாளர் சங்கங்களின் கோரிக்கை ஏற்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் தொகை வழங்கும் முடிவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளது. இதன் மூலம் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25,824 ஊழியர்கள் பயன் பெற உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“