இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில், "நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரையிலும் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையும் தமிழக மக்கள் முழுமனதாக வரவேற்கிறார்கள். செப்டம்பர் மாதத்துக்கு பின்னரும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவும், விரிவாக ஆராய்ந்து துல்லியமான திட்டமிடல் படி எடுக்கப்படுகிறது. தி.மு.க. அரசியல்வாதிகள் பண மோசடி மற்றும் ஊழல் செய்வதில் புதிய முறைகளை கண்டுபிடிப்பவர்கள்.
மூத்த அமைச்சர் ஒருவர் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் சம்பாதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். தி.மு.க அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த 2,000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் மூலமாக மாற்றுவார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே இதுபோன்ற ஆதாரங்கள் மூலமாக அதிகப்படியாக வரும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் உன்னிப்பாக கவனித்து, கண்டுபிடிக்கவேண்டும். இதை கண்காணிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“