தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு திருவிழா நேற்று கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது.
இதில் 100 மூட்டை அரிசி, சாதமாக வடிக்கப்பட்டு, 1000 ஆடுகள் வெட்டி, 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தளிகைவிடுதி கிராமத்தில் நல்லபெரமஅய்யனார், செம்முனி, முத்துமுனி கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 1,000 ஆடுகள் வெட்டப்பட்டது. வெட்டிய ஆடுகளின் கறிகளை குழம்பு வைத்தும், 100 மூட்டை அரிசி சாதமாக வடித்து, ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் தளிகைவிடுதி, அக்கரைவட்டம், சில்லத்தூர், வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி, தெற்கு கோட்டை, வடக்குகோட்டை, கிளாமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் விருந்தில் பங்கேற்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாதம் வைத்துக் கொண்டும், 500க்கும் மேற்பட்டவர்கள் பரிமாறினர். விருந்தில் பங்கேற்றனர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து வாழை இலையில் உணவருந்தினர். இது குறித்து இக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும் ஊராட்சி மன்றத் தலைவருமான பொன்.முத்துவேல் கூறியதாவது: எங்களது கோயிலில் ஆடிவெள்ளிக்கிழமையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி கிடா வெட்டு திருவிழா நடத்துவது வழக்கம்.
கொரோனா காலம் என்பதாலும், கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றதாலும் இரண்டு ஆண்டுகள் இந்த திருவிழா நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்தாண்டு கிடா வெட்டு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதற்காக அருகில் உள்ள கிராமங்களில் உள்ள உறவினர்கள் அனைவரையும் நாங்கள் வரவழைத்தோம்.
வியாழக்கிழமை (ஆக.11) இரவு ஆடு வெட்டும் திருவிழா தொடங்கியது. விடிய விடிய 1000 ஆடுகள் வெட்டப்பட்டது. வெட்டிய ஆடுகளை ஒருபக்கம் சமையல் செய்தனர்.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை (நேற்று) அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விருந்தில் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமையலும் ஆண்கள் மட்டுமே சமைத்தனர். இதற்காக 100 மூட்டை அரிசி சாதமாக வடிக்கப்பட்டது. சாதத்தை டிராக்டர், சுமை ஆட்டோவில் வைத்துக் கொண்டு 500-க்கும் மேற்பட்டோர் பரிமாறினர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“