2017 trust vote 11 mlas case : முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 11 பேரை தகுதி நீக்க வழக்கை சபாநாயகர் தனபால் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தார்.
முதற்கட்ட விசாரணை :
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோருக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இந்த விசாரணையின் போது, தகுதி நீக்கம் தொடர்பாக பல சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என புகார்தாரரான தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. பார்த்திபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார். நேற்று, தகுதி நீக்க புகாருக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் பாண்டியராஜன், சென்னை மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் ஆகிய 2 அதிமுக எம்எல்ஏக்களிடம் மட்டுமே விசாரணை நடந்தது. தினகரனுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டவரும் புகார்தாரருமான சோளிங்கர் தொகுதி மாஜி எம்எல்ஏ பார்த்திபனிடமும் சபாநாயகர் தனபால் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின்போது, 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது, அதிமுக எம்எல்ஏவாக செயல்பட்ட நீங்கள் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரும் தங்களின் விளக்கத்தை அளித்தனர். இந்த 2 எம்எல்ஏக்களை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற 9 எம்எல்ஏக்களிடம் விரைவில் சபாநாயகர் தனபால் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம், இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும், எந்த ஆதாரமும் இல்லாமல் அளிக்கப்பட்ட தகுதி நீக்க புகாரை நிராகரிக்க வேண்டும் என வாதிட்டதாக தெரிவித்தார். இன்றைய விசாரணை முடிந்து, சபாநாயகர், தனது தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும் வழக்கறிஞர் அப்துல் சலீம் குறிப்பிட்டார்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது தனி அணியாக செயல்பட்ட தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன், சண்முகநாதன் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் சட்டத்தின் அடிப்படையில் மூன்று மாதத்தில் உரிய முடிவெடுப்பார் என கூறியது. ஆனாலும் விசாரணை நடத்தப்படவில்லை. திமுக மீண்டும் புதிய மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil