அமைச்சர் துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த்திடம் நேற்று அமலாக்கத் துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பாக கூறப்பட்டது. அதன்படையில் சோதனை மேற்கொண்டதில் ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கதிர் ஆனந்த் மற்றும் தி.மு.க பிரமுகர் மீது காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
காட்பாடியில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு, கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி கதிர் ஆனந்த் எம்.பி.க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேற்று காலை 10.45 மணி அளவில் ஆஜரானார். அவரிடம் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களை காண்பித்து அது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து, விசாரணை முடிந்து வெளியே வந்த கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் விவகாரம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நான் விளக்கம் அளித்தேன். நாளை (இன்று) விசாரணை பற்றி அவர்கள் சொல்வார்கள் என்று கூறினார்.