2024-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் வெள்ளோட்டமாகத்தான் அனைத்துக் கட்சிகளும் களத்தில் பம்பரமாக சுழலத் தொடங்கி விட்டன. பிரதமர் மோடி தமிழகப் பயணமும் அதை பறைசாற்றும் விதமாகத்தான் அமைந்திருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் ஆளும் கட்சி பிரமுகர்களின் லஞ்ச, லாவன்ய சொத்துப்பட்டியலை நாளை பா.ஜ.க வெளியிடுகின்றது.
இந்தநிலையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது. இரண்டு கட்சியிலும் 1 கோடி உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்க விண்ணப்ப படிவத்துடன் வீடு வீடாக கட்சி நிர்வாகிகள் சென்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வருகிறார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இதே கருத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். அதற்கேற்ப கட்சியிலும் பல்வேறு நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை தேர்தல் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை வெகு சாதுர்யமாக திமுக தொடங்கி விட்டது.
இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் என 5 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட கட்சியின் மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 234 சட்டசபை தொகுதிக்கும் 234 பேரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதால் இவர்கள் ஒன்றியம், பகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் வாரியாக திறமையான கட்சி நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். பெரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
வார்டு கவுன்சிலர்கள் மூலம் 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்தான் அந்த 100 ஓட்டுகளையும் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 100 ஓட்டில் தி.மு.க. ஓட்டு எவ்வளவு. அதில் அ.தி.மு.க. ஓட்டு எவ்வளவு மற்ற கட்சி ஓட்டு எவ்வளவு, எந்த கட்சியையும் சாராத மக்கள் எவ்வளவு பேர் என்ற பட்டியலை திரட்ட ஆரம்பித்திருக்கிறது திமுக.
இது மட்டுமின்றி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 31 பேரை நியமித்துள்ளனர். அதில் இளைஞரணியினர் 10 பேர், மூத்த நிர்வாகிகள் 10 பேர், மகளிர் அணியினர் 10 பேர், தகவல் தொழில் நுட்ப அணியில் இருந்து ஒருவர் என 31 பேரை நியமித்து உள்ளனர்.
இது தவிர பூத் பொறுப்பாளர் என்று ஒரு வரையும் நியமிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதில் சில மாவட்டங்களில் 20 பேர் என்றும், சில மாவட்டங்களில் 31 பேர் என்றும் கட்சி நிர்வாகிகளை பொறுத்து நியமிக்கின்றனர். இவர்களது முழு முகவரி, செல்போன் நம்பர்கள் அனைத்தும் விவரமாக தயாரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் புத்தகமாக அச்சிட்டு வழங்கி வருவதாக திமுக விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தி.மு.க. வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் செயல்பட்டதால் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடிந்தது என்று கட்சி நிர்வாகிகள் பெருமிதம் அடைந்தனர்.
ஆனால் இப்போது “பிரசாந்த் கிஷோர்” தி.மு.க. வுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படவில்லை. ஆனால் அவரிடம் தொகுதி வாரியாக வேலை பார்த்த நிர்வாகிகள் இப்போது தி.மு.க.வுக்கு பணியாற்றி வருகின்றனர். எனவே, இவர்களை வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று தி.மு.க. வியூகம் வகுத்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளதால் அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.
இருந்தபோதும் பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. திமுகவில் உள்ள பிரபலங்களின் சொத்துப் பட்டியலை தயார் படுத்தும் வேலைகளில் பாஜக நிர்வாகிகள் சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தனர். அதன் அடிப்படையில், நாளை பாஜக சார்பில் திமுக பிரமுகர்களின் லஞ்ச லாவன்யங்களை இணையத்தில் பதிவேற்றவிருக்கின்றது.
என்னதான் பாஜக தொடர்ந்து திராவிடக் கட்சிகளுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தாலும், அதையும் கடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் திமுக மீண்டும் பெரும்பான்மையை பிடிக்க மிகவும் சிரமப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருவதாகவே திமுக விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“