2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ள இந்தியா டுடே, இந்திய அரசியலில் தனக்கென ஒரு பலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சரியாக ஓராண்டு உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னணியில் இருப்பதாக இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணியில் தி.மு.க வலுவான நிலையில் இருப்பது மட்டுமின்றி, இந்திய அரசியலில் தனக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நலத்திட்டங்கள், கூட்டாட்சிக்கான ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை, தமிழகத்தை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அடையாளத்தை இந்திய அளவில் கவனம் பெறச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட், இந்தி திணிப்பு, ஆளுநரின் தலையீடு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருவதன் மூலம், தி.மு.க.-வை இன்னும் நடமுறையில் உள்ள இயக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் நிலைநிறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் வலுவான பிணைப்பு இல்லாததாக கருதப்படும் அதிமுக-பாஜக கூட்டணி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூடுதல் வலுசேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களில் அ.தி.மு.க. எடுத்த நிலைப்பாட்டுக்கு பின் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது இரு கட்சிகளுடனான உறவில் இழுபறி நிலையே நீடிப்பதாகவும், இந்த விவகாரங்களில் தி.மு.க-வின் நிலைப்பாட்டால் அ.தி.மு.க-வின் வாக்குகள் சரிவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைல் கார்ட் என்ட்ரி போல் அரசியலில் குதித்துள்ள த.வெ.க தலைவர் விஜய் அதிகளவில் இளைஞர்களை ஈர்த்தாலும், அது தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. த.வெ.க. வாக்குகளைப் பிரிப்பதாலும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க.வை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே என்றே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.