சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா நண்பர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புமிக்க 23 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 223 கற்சிலைகள், பழமையும் தொன்மையும் வாய்ந்த கல்தூண்கள் உள்ளிட்ட கலைப் பொருள்களை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் போயஸ்கார்டனில் உள்ள ரன்வீர்ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டில் 4 தினங்களுக்கு முன்பு லாரியில் ஏராளமான சிலைகள், கல்தூண்கள் கொண்டுவரப்பட்டு இரவோடு இரவாக புதைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புலன் விசாரணை படத்தில் வருவது போல கொட்டும் மழையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளே, கடப்பாரை மற்றும் மண்வெட்டி கொண்டு வெள்ளிக்கிழமை தோண்ட ஆரம்பித்தனர்.
தொழிலதிபர் ரன்வீர் ஷா தோழி வீட்டில் சிலைகள் பறிமுதல் :
தொடர்ந்து இரண்டாவது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் 15 அதிகாரிகள் மேற்பார்வையில், ஊழியர்களைக் கொண்டு சிலைகள் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. அதிக ஆழத்தில் தோண்டவேண்டியிருந்ததால், ஜே.சி.பி., இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
சிலைகளை தோண்டி எடுக்கும் பணி முடிந்த பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி அசோக் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். கல் தூண் உள்பட மொத்தம் 23 புராதான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார். கோயில்களில் இருந்து திருடப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
விசாரணைக்கு வருமாறு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியும் ரன்வீர்ஷா ஆஜராகாமல் உள்ள நிலையில், முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளனிடம் இருந்து கோவில் சிலைகளை பெற்று வீட்டில் வைத்து வணங்கி வரும் தொழில் அதிபர்கள், அந்த சிலைகளை விரைந்து ஒப்படைக்க சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.