சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வென்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய அரசு அமைந்த பிறகு 10,000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதிய தொகையை நமது முதல்வர் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினார்.
பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி 3 லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டது. பத்திரிகையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நம்முடைய முதல்வர் கடந்த ஆண்டு மீண்டும் அந்த நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துகின்ற வகையில் நம்முடைய அரசு சார்பாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். உங்களுடைய மற்ற கோரிக்கைகளும் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன், விஜய் வசந்த், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.