/tamil-ie/media/media_files/uploads/2023/07/OFT-Trichy-1.jpg)
திருச்சி ஹெச்.ஏ.பி.பி.குடியிருப்பு பகுதியில் கொள்ளை, 8 வீடுகளில் 25 பவுன், ரூ.40 ஆயிரம் கொள்ளை,
சொந்தமான ஹெச்.ஏ.பி.பி., தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஒரே சமயத்தில் சுமார் 8 வீடுகளின் பூட்டை உடைத்து பல லட்சங்களை கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்களால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.
திருச்சியை அடுத்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.பி.பி., தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஒரே சமயத்தில் சுமார் 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்களால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகே உள்ளது மத்திய பாதுகாப்பு படைகளன் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெஸ்.ஏ.பி.பி., தொழிற்சாலை. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கென அந்தப்பகுதியில் தொழிற்சாலை சார்பில் குடியிருப்பும் இருக்கின்றது.
இந்தக் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஒரே இரவில் 8 வீடுகளின் பூட்டை உடைத்த 3 வட மாநில கொள்ளையர்கள், சுமார் 25 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.40 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். 24 மணி நேர செக்யூரிட்டி பாதுகாப்புகளுடன் அன்னியர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் குடியிருப்புகளும், தொழிற்சாலையும் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் 3 பேர் நேற்று இரவு உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்படியே நுழைந்த மர்ம நபர்கள் டைப் 2 பகுதியைச் சேர்ந்த துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான வர்ணன் தனது மாமனாரை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வருணன் வீட்டில் அவரது மாமனார் தூங்கிக் கொண்டிருந்தபொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்து வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணத்தை எடுத்ததோடு, மேலும், நகையை தேடிய பொழுது சத்தம் கேட்டதால் வர்ணனின் மாமனார் என்ன சத்தம் என சத்தமிட்டதை தொடர்ந்து அங்கிருந்த அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
மேலும் டைப் 3 சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் எச்ஏபிபி தொழிலாளர். இவரது மகனுக்கு அண்மையில் திருமணமாகி உள்ள நிலையில், இவர்கள் குடும்பத்துடன் கரூர் சென்றதாகவும், இந்த நிலையில் வீட்டிலிருந்து 25 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதையும், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் காலையில் வந்து பார்க்கும் பொழுது தான் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
அதேபோல், டைப் ஒன் குடியிருப்பு பகுதியில் பூட்டப்பட்டிருந்த மூன்று வீடுகளையும், டைப் 3-இல் இருந்த ஒரு வீட்டினையும் அந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்திருக்கின்றனர். ஆனால், அந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் காலி செய்து சென்ற நிலையில் நிர்வாகம் அந்த வீடுகளை பூட்டி வைத்திருந்தது தெரியாமல் ஆள் இல்லாத வீடுகளின் பூட்டையும் உடைத்து பார்த்து ஏமாந்து திரும்பியிருக்கின்றனர்.
இந்த நிலையில் கே.வி.பள்ளி குடியிருப்பு அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமணன் மற்றும் ஒரு ஆசிரியரின் வீட்டையும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்ப்பார்த்தமாதிரி அங்கே பெரியளவில் ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹெச்.ஏ.பி.பி தலைமை பாதுகாப்பு அதிகாரி நவீன்குமார் சம்பவ இடங்களைப் பார்வையிட்டதோடு, திருச்சி எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து சென்றதோடு சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதேபோல் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று நின்றது.
அந்த பகுதியில் மொத்தம் 14 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை போலீஸார் ஆய்வு செய்ததில், 5 கேமராக்களின் பதிவில் சுமார் 18 முதல் 22 வயது மதிக்கத்தக்க 3 வட மாநில இளைஞர்கள் வருவது பதிவாகி உள்ளதாகவும், அவர்கள் மூன்று பேரும் மேல் சட்டை இல்லாமலும், இருவர் தலையில் துண்டு கட்டி உள்ளதும், ஒருவர் மாஸ்க் போட்டுள்ளதும், அவர்களின் கையில் புல் வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி மற்றும் லிவர் உள்ளிட்ட ஆகிய ஆயுதங்களை வைத்திருந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்தக் கேமரா பதிவுகளின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான, நாட்டிற்கு படைகளன்களை உருவாக்கும் மிகவும் பாதுகாப்பு நிறைந்த துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு ஒரே ஒரு நுழைவாயில் தான் இருக்கின்றது. இங்கே உள்ள குடியிருப்பில் 70 வீடுகள் காலியாக உள்ளது என்றும், மேலும், அந்நியர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படைகளன் தொழிற்சாலையின் குடியிருப்பு பகுதியிலேயே ஒரே நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் இதேபோன்று நான்கு ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்தது. அதில் ஒரு சில வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இருப்பினும், அதிக அளவு சுமார் 30-க்கும் மேற்பட்ட பவுன் மதிப்புள்ள நகைகள், 2 கிலோ வெள்ளி திருட்டு போனது இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு சொந்தமான மிகவும் உயர்மட்ட பாதுகாப்பு வளையம் நிறைந்த பகுதிக்குள் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்திருப்பது அப்பகுதி குடியிருப்புவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.