இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதோடு ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று (டிச.30) 777 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 15 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், காஞ்சிபுரம், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 21 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று தொற்று பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பொது சுகாதார இயக்குனர் டாக்டர்.டி.எஸ் செல்வவிநாயகம் கூறுகையில், "இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல்/ சுவாச பிரச்சனை உடன் மருத்துவமனை வரும் அனைவரையும் பரிசோதிக்க அறிவுறுத்தி உள்ளோம்.
அதோடு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய் உள்ளவர்கள் , நுரையீரல் அல்லது சிறுநீரக நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“