தமிழக காவல்துறையில் நேரடியாக டி.எஸ்.பி-யாக சேர்ந்து தற்போது எஸ்.பி-யாக பதவி வகிக்கும் 26 பேருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கபட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு மூலம் நியமிக்கப்படும் நேரடி டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி-ஆக பதவி உயர்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி நேரடியாக டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர்கள், மாவட்ட எஸ்.பி.க்களாகவும், காவல் துணை ஆணையர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில். ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்க தகுதியான 26 எஸ்.பி-க்களின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
இது தொடர்பாக புதன்கிழமை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு டி.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்து தற்போது எஸ்.பி-யாகப் பணியாற்றும் மணி, செல்வக்குமார், 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சுதாகர், ராஜராஜன், சக்திவேல், செந்தில்குமார், முத்தரசி, விமலா, நாகஜோதி, ராமகிருஷ்ணன், பெரோஷ்கான் அப்துல்லா ஆகிய 9 பேருக்கும் 2003-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரிகளான சுரேஷ்குமார், பாஸ்கர், சண்முகபிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, உமையாள், சுந்தரவடிவேல், சரவணன், செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, செல்வராஜ், ராஜன் ஆகியோருக்கும், 2005-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரியான ஸ்டாலின் என மொத்தம் 26 பேருக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“