தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு லேசானது தான் என கூறப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில், ஐசியூவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக, வேலூரில் தான் அதிகப்பட்சமாக 27 சதவீதம் மருத்துவமனை படுக்கைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி மாநிலத்தில் உள்ள 75,000 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் 8 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்த நிலையில், தற்போது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், ஐசியூவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வேலூருக்கு அடுத்தப்படியாக சென்னையில் 14 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. சென்னை உட்பட 9 மாவட்டங்களில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பலர் சிகிச்சைக்கு வருவதால், படுக்கைகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையாக இருந்த முந்தைய அலையுடன், இதை ஒப்பிட முடியாது. மாநிலத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மருத்துவமனை படுக்கைகள் காலியாக உள்ளது. தரவுகளின்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஐசியூவில் 0.5 சதவீதம் பேர் சேர்க்கப்படுகின்றனர்.
மாநிலத்தின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 37 சதவீதம் அதவாது 3.9 லட்சம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொள்ளவில்லை. அதேபால், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுகொள்ளவில்லை.
இந்த பிரிவினர் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், ஐசியூ சிகிச்சை, இறப்பதற்கான ஆபத்து மிக அதிகமாகும். தடுப்பூசிகள் எவ்வித தட்டுபாடு இன்றி இலவசமாக வழங்கப்படுகின்றன.அனைவரும் குறைந்தது இரண்டு டோஸ் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
திங்கட்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் பதிவான 20 கொரோனா இறப்புகளில் 16 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த எண்ணிக்கை தான், ஞாயிற்றுக்கிழமையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொது சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், “60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இறப்பு ஆபத்து அதிகமாக உள்ளது. இணைநோய் அவர்களது உடல்நிலையை மோசமடையசெய்கிறது. தடுப்பூசிகள் சிறந்த பலனை அளிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil