கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் ராகுல் ஷா (23) என்பவர் கடந்த 02.12.2024 அன்று கோகுலம் பார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள் திடீரென்று ராகுல் ஷாவை வழிமறித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூபாய் 300 பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்கள்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் (13.12.2024) மைலம்பட்டி பகுதி சேர்ந்த கணேசன், ஊட்டியைச் சேர்ந்த ரகுநாத் மற்றும் பீளமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்-1, ரூபாய் 300/- மற்றும் ஆட்டோ-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் சூலூர் காவல் நிலைய பகுதியில் மற்றொரு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இந்நிலையில் மேற்படி வழிப்பறி வழக்கின் சொத்துக்களான இரண்டே கால் பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“