திருப்பூரில் உள்ள காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சமூக நல பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமுருகபூண்டியில் விவேகானந்த சேவாலயம் செயல்பட்டுவருகிறது. இந்த காப்பகத்தில் 15 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் 3 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த சமூக நல பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு காப்பகம் முறையாக செயல்படுகிறதா? அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? சிறுவர்களின் உயிரிழப்புக்கு உணவு ஒவ்வாமை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தும்.
தொடர்ந்து இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மற்ற சிறுவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காப்பகத்தை திருப்பூரை சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் நடத்திவந்துள்ளார்.
வளர்மதி தலைமையிலான குழுவில் மாவட்ட அதிகாரிகளும் உள்ளனர். இதற்கிடையில் காப்பகத்தில் அரசு வெளியிட்ட விதிகள் எதுவும் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றஞ்சாட்டும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“