சமூக சீர்திருத்தவாதியான பெரியாரின் சிலைக்கு முன்னால் நிற்கும் படத்தை வெளியிட்ட பின்னர், மூன்று காவலர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதாக, அரசியல் கட்சிகள் குற்றம் சாட்ட, அதனை கடலூர் மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் எம். ஸ்ரீ அபிநவ், அவர்களின் தவறான நடத்தைக் காரணமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்ட படத்திற்கும், இடமாற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடலூர் முதுநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ரங்கராஜ், அசோக், ரஞ்சித் உள்ளிட்டோர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அந்த சிலையின் கீழ் நின்று எடுத்த படம் சமூக ஊடங்களில் பகிரப்பட்டது. அந்த படத்தை எடுத்தபோது மூன்று பேரும் காவல் சீருடையில் அல்லாமல் கறுப்பு நிற சட்டை அணிந்தவாறு படம் எடுத்து அதை சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இதனால் தான் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கும் இடமாற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
திராவிட கட்சித் தலைவர் கி. வீரமணி மூன்று காவலர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்றும் தமிழர்கள் கல்வி பெற வேண்டும், வேலை பெற வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்ட பெரியாருக்கு மரியாதை செலுத்துவதில் எந்த தவறும் இருக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர் நடப்பது அண்ணா ஆட்சியா, ஆச்சாரியார் ஆட்சியா? என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியில் இப்படிப்பட்ட அவலம் நடைபெறுகிறது. 3 காவலர்கள் இடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தந்தை பெரியார் உள்ளிட்ட முன்னோடி தலைவர்களின் சிலைகளுக்கு காவித்துணி அணிவித்தும், காவி சாயத்தை பூசியும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசு, சிலைக்கு மரியாதை செய்த காவலர்களை தண்டித்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இவ்வாறு 3 காவலர்கள் இடமாற்றம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”