கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இதில் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களைப் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
உடனடியாக 3 பேரையும் கைது செய்த போலீசார் உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் 3 பேரும் சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் என்பது தெரிந்தது. தற்போது கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் அவ்வப்போது குருவி சுடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குருவி சுடும் துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என எண்ணிக்கொண்டிருந்த போது ரோந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து துப்பாக்கி, கைப்பை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை