திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் உதவி எண் (Help Line) 9487464651 மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பச்சப்பெருமாள்பட்டி தங்க நகரில் வசித்து வரும் மாரப்பன் மகன் சாமிகண்ணு என்பவரது வீட்டினை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படையினர் நேற்றிரவு (அக்.30) சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் சாராய ஊரல், விற்பனைக்காக வைத்திருந்த 30 லிட்டர் சாராயம், சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரம் 2, நாட்டுச்சக்கரை 7 கிலோ, விற்பனைக்காக வைத்திருந்த 1 லிட்டர் அளவுள்ள சாராய பாட்டில்கள் -60, சிலிண்டர் - 2, ஸ்டவ் -1, சாராயம் ஊரல் போட பயன்படுத்தப்படும் 200 லிட்டர் அளவுள்ள பேரல் - 10, கடுக்கா கொட்டை-1 கிலோ, சுக்கு - 1/2 கிலோ ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது. சாமிகண்ணு தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.
மேலும், சாமிகண்ணுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குக்கர் வெடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மேற்படி தீக்காயமானது சாராயம் தயாரிக்கும்போது குக்கர் வெடித்திருக்காலம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“