திருவாரூர் சாதி ஆணவக்கொலை: கணவன், மனைவி, குழந்தையை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

திருவாரூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளையும், பிறந்து 40 நாட்களேயான அவர்களது குழந்தையையும் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவாரூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளையும், பிறந்து 40 நாட்களேயான அவர்களது குழந்தையையும் கொன்ற மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவாரூர் மாவட்டம் கீழ்மருதூரை சேர்ந்த பழனியப்பன். சாதி இந்துவான பழனியப்பன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அமிர்தவல்லி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர்களது திருமணத்தால் கோபம்கொண்ட பழனியப்பனின் சகோதரர்கள் சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் ஆகியோர், தன் கூட்டாளிகள் துரைராஜ் மற்றும் மகேந்திரன் ஆகியோருடன் இணைந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு, டிசம்பர் 10-ஆம் தேதி அத்தம்பதியரையும், பிறந்து 40 நாட்களேயான அபினேஷ் என்ற குழந்தையையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இதையடுத்து, நான்கு பேரையும காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி கார்த்திகேயன் வழங்கினார். அதில், கொலையாளிகள் 4 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு விதித்தார். மேலும், கொலையான பழனியப்பனின் சகோதரர் சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்றொரு சகோதரர் ராமகிருஷ்ணனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூட்டாளிகளான துரைராஜூக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நான்காவது குற்றவாளியான மகேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும், நால்வருக்கும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.

இந்த தீர்ப்பை கொலையான அமிர்தவல்லியின் குடும்பத்தினர் வரவேற்றனர். அமிர்தவல்லியின் தாயார் தீர்ப்பு குறித்து கூறுகையில், “கொலையாளிகள் இறக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்”, என தெரிவித்தார்.

×Close
×Close