கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்பு குணமான சுமார் 350 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள், தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தங்களின் நோய் எதிர்ப்பு அணுக்களை (பிளாஸ்மா) தானமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.
தானம் செய்ய முன்வந்தவர்களில் பெரும்பாலும், சுல்தான்புரி மற்றும் நரேலா பகுதிகளில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு மையங்களில் இருந்து குணமடைந்தவர்கள் என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இவர்களை பார்வையிட்டார்.
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஃபரா பஷர் (40), சுல்தான்புரி தனிமைப்படுத்துதல் மையத்தில் தனது நோய் எதர்ப்பு அணுக்களை நன்கொடையாக அளித்தார். “நான் இதை மனிதநேயத்துக்காகவும் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் செய்துள்ளேன். என்னைப் போலவே, நோயிலிருந்து மீண்ட பலரும் தங்கள் நோய் எதிர்ப்பு அணுக்களை தானம் செய்ய முன்வருகிறார்கள், ” என்று ஃபரா பஷர் தெரிவித்தார் .
நிஜாமுதீன் மார்க்கஸ் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2,300க்கு மேற்பட்டவர்களில், 1,080க்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பலர் தற்போது மருத்துவமனைகளில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
கோவிட்-19 போர்க்களத்தில் புது வெளிச்சம்: பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?
கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்ட நோயாளிகள், தங்கள் நோய் எதிர்ப்பு அணுக்களை தானம் செய்யுமாறு அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விதித்திருந்தார். பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் ஆரம்ப கட்ட முடிவுகள் "ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார்.
சிகிச்சை எப்படி தரப்படுகிறது?: கோவிட்-19 நோய் பாதித்து, குணமானவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்படும். அது பகுப்பாய்வு செய்து வைரஸை எதிர்க்கும் அணுக்கள் மட்டும் தனியே எடுக்கப்படும். கன்வலசன்ட் சீரம், அதாவது கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த அணுக்கள், கோவிட்-19 பாதித்த நோயாளிக்கு செலுத்தப்படும். நோயுற்றவர் மறைமுகமான நோய் எதிர்ப்பாற்றல் பெறுகிறார். ``ரத்த அணுக்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னதாக, ரத்தம் தருபவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அதன் பிறகே நோயுற்றவருக்கு அது செலுத்தப்படும். முதலில், குணமடைந்தவரிடம் நோய்க்கான அறிகுறி முற்றிலும் இல்லை என்ற சோதனை முடிவு கிடைக்க வேண்டும். முழுமையாகக் குணமடைந்தவர் என அவர் சான்றளிக்கப் பட்டிருக்க வேண்டும். 18-60 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு வாரங்கள் அவர் காத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு அவருக்கு கோவிட்-19க்கான எந்த விதமான மறுஅறிகுறியும் தோன்றாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒரு நிபந்தனை கட்டாயமாக பூர்த்தியாகிட வேண்டும்'' என்று இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது .
லோக் நாயக் மருத்துவமனையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட ஆறு பேரில் , இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்ற நோயாளிகளுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு அணுக்களை தானம் செய்ய விரும்பும் நன்கொடையாளர்களின் பட்டியலை மருத்துவமனை நிர்வாகம் தயாரித்து வருகிறது.
நோய் எதிர்ப்பு அணுக்கள் மதங்களை பார்ப்பதில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்
"பிளாஸ்மா சிகிச்சை உட்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவர் குணமடைந்து உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்பவார் என்று நம்புவதாக மருத்துவமனையின் சுகாதார இயக்குநர் டாக்டர் ஜே.சி.பாஸ்ஸி தெரிவித்தார்.
இதேபோல், கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்) சுமார் 11 ப்லாஸ்மாக்களை நன்கொடையாக பெற்றுள்ளது .
டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 49 வயது நிரம்பிய கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.