முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன்' என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. அதன்படி, இயக்கத்தை ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் 35,000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 45 நாட்களில் குறைந்தது 25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உறுப்பினர் கட்டணம் இல்லாமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சியில் உறுப்பினராகும் வகையில் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றினால் போதும், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அதை சரிபார்த்து உடனே உறுப்பினர் ஆக்கப்படுவார்கள். உறுப்பினர் ஆன பின்பு கட்சிக்குள்ளான வாக்கெடுப்புகளில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தேர்தலில் பங்கேற்க ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ஒரு நபர் 25 பேரைச் சேர்த்தால், அவர் உடனடியாக தேர்தல்களில் பங்கேற்க தகுதியுடையவர். உறுப்பினர்கள் ஆன்லைன் போர்ட்டல் வழியாக கட்சியில் சேர்கிறார்கள் என்றாலும், கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ``எல்லோரும் நம்முடன் இயக்கத்தின் நோக்கம், யார் கட்சியில் சேர விரும்புகிறார்களோ, அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான்.
கொரோனா லாக் டவுனால், மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகளை குறைத்துள்ளது. ஆனால் `எல்லோரும் நம்முடன்' திட்டம் மக்களுடன் தொடர்பு கொள்ள எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒத்த எண்ணம் கொண்ட அனைவரையும் ஒன்றிணைக்கவும், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்கவும் இது உதவும். திமுகவில் இளைஞர்கள் சேர வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார்.