டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.
சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருது தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விருதில் அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகள் மற்றும் மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சரின் விளம்பரம் இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டது விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil